உன் காதலும் என் காதலும்

அன்புப் பார்வை அளிக்காதல்
==ஆசை முறுவல் உதிர்க்காதல்
இன்பத் தேனை வார்க்காதல்
==இதயம் தன்னை கேட்காதல்
என்றும் என்னை நினைக்காதல்
==ஏங்கும் நெஞ்சை வாங்காதல்
நின்று நிமிர்ந்து நோக்காதல்
==நினைத்து நினைத்து உருகாதால்
என்னில் உன்னை புதைக்காதல்
==இரண்டு கைகள் இணைக்காதல்
மின்னல் வெட்டி மழைக்காதல்
==மேகம் போலே கலக்காதல்
இன்னல் வழியை அடைக்காதல்
==இதயக் கதவை திறக்காதல்
கன்னல் ஆற்றில் குளிக்காதல்
==கவிதை போன்று பூக்காதல்.
மௌனப் பூட்டை உடைக்காதல்
==மலராய் இதழ்கள் விரிக்காதல்
யௌவனம் மட்டும் குறைக்காதல்
==யாசகம் கேட்டும் கொடுக்காதல்
பௌர்ணமி வசந்தம் ருசிக்காதல்
==பருவம் வந்தும் ரசிக்காதல்
கௌரவம் விட்டுக் கொடுக்காதல்
==கதிர்விட மறுத்த உன்காதல் .
தென்னை போலே வளர்காதல்
==தென்றல் வீசும் குளிர்காதல்
என்னை மறக்கும் என்காதல்
==ஏக்கம் விட்டுத் தொலைக்காதல்
அன்னை சொல்லி கேட்காதல்
==அப்பன் வாக்கில் அடங்காதல்
உன்னை எண்ணி உறங்காதல்
==உயிரில் உன்னை அழிக்காதல்
மாலை பொழுதை மறக்காதல்
==மதிலை விட்டு விலகாதல்
வேலைக் கென்று போகாதல்
==வீட்டில் கூட இருக்காதல்
நாளைப் பற்றி நினைக்காதல்
==நண்பர் கூட்டம் தவிர்க்காதல்
மூளை கெட்ட முதல்காதல்
==முறிந்த பின்னும் கசக்காதல்.!
*மெய்யன் நடராஜ்