குறளில் குறுநகை புரிவாள்
விழியின் எழில்நீலம் என்கவிதை வானம்
பொழிலின் கமலம் முகம்
முகம்தா மரைவான் நிலவுபோல் நெற்றி
இதயம்இன் தென்றல் பொழில்
பொழிலிலாடும் நீரலைக் கோடுகளுன் நெற்றி
விழுந்திடும் பொன்வரி கள்
பொன்வரி யோடுமுன் நெற்றிச் சிவப்பில்
கலைந்தாடும் கூந்த லிழை
கூந்தல் கலைந்துவந்து சின்னக்கன் னக்குழிவில்
நன்றிசொல்லும் உன்புன் னகை
புன்னகை இன்இதழ் தேன்ததும்பும் பூமலரோ
இன்னிசை பாடும்வண் டும்
வண்டாடும் பூஞ்சோலை வான்நிலவு தோற்குமுனை
கொண்டாடும் நன்மலர் கள்
நன்மலர் போற்றும் விழிமலர் தேவ்வ்வதையே
பொன்னந்திப் போதும்நீ யே
பொன்னந்திப் போதும் புலரும்கா லையும்நீ
தேன்சிந்தும் என்கவியும் நீ
தேன்சிந்தும் என்கவிநீ தந்த குறளமுதம்
வான்தொட்ட வள்ளுவன ருள்
------கவின் சாரலன்