காதலென்றே சொல்லுதடி
தட்டி வீசும் பார்வை
பிடிச்சிருக்கே-அட
உருளும் கிண்ண
சத்தந்தானே இதயமெல்லாம்.
முட்டி மோதும் கோபம்
பிடிச்சிருக்கே-அட
பருகும் தண்ணி
தீர்க்கலயே தாகமெல்லாம்.
அடி கனவு இன்னும் கலையலயே
விடிஞ்சிருச்சே என்ன செய்ய
கண்கசக்கி திரும்பயில
வந்து நிக்குற.
அதிகாலையிலே இங்க மழை
சாரல் கொஞ்சம் வாசல் தொட
நெருங்கி வந்து முத்தம் தந்து
ஓடி மறையுற.
சன்னல் கம்பி கோர்த்த துளியும்
சுண்ணம் உதிர சாய்ந்த சுவரும்
தூரத்தெரியும் ஈர மதிலும்
காதெலென்றே சொல்லுதடி.
தேங்கி நிற்கும் நீரின் அலையும்
நெஞ்சுடைக்கும் துளியின் குமிலும்
இடிமுழங்கி ஓய்ந்த பகலும்
காதெலென்றே சொல்லுதடி.
மேகம் விலக செடிமழையும்
ஒட்டிப் பிரியா ஈரிலையும்
ஈரமண்ணில் கால்தடமும்
காதலென்றே சொல்லுதடி.
மெல்ல வெளிச்சம் பரவயிலும்
கொதிக்கும் கோப்பை பிடித்த விரலும்
மீண்டும் மழை வேண்டும் மனமும்
காதலென்றே சொல்லுதடி.
--கனா காண்பவன்