எழுத்துஇழுக்கு
எழுத்து என்று துவங்கி இழுக்கு என்று முடிக்கும்படி ஒரு வெண்பாப் பாடச் சொல்லி புலவர்.ஆறுமுகம் என்று ஒருவர் சொன்னமைக்கு எழுதியது. நாங்கள் பேசுகையில் எனது மாமா எடுத்த புகைப்படம்.....
வெண்பா:
'எழுதிக் கொடுத்திட்ட ஏற்றமிகு பாட்டில்
பழுத்தென்ன?' என்றார் பகவான் - 'பழுதெல்லாம்
சொல்பொருளில் உண்டென்றான்' ! சொல்லிலே நக்கீரன்
'இல்லை'யென் றானே 'இழுக்கு' !
கருத்து :
"தான் எழுதிக் கொடுத்திட்ட பாட்டில் என்ன குற்றம் கண்டீர் என்று பகவான் நக்கீரனை நோக்கிக் கேட்டார். அப்பொழுது நக்கீரன் பழுது எலாம் சொல்லும் பொருளில்தான் உள்ளது என்றும் சொல்லின் சுவையில் இழுக்கு இல்லை என்றான்" இந்தக் கருத்தை அப்படியே அவர் சொன்ன கட்டளைக்குள் வெண்பாவாகப் பாடினேன்.
குறிப்பு :
கவி காளமேகம் இதுபோல் பலர் தந்த குறிப்புகளுக்கு வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர். அவரை முன்னோடியாகக் கொண்டே இந்தப் பாவைச் செய்தேன்.
வித்தக இளங்கவி
விவேக்பாரதி