கவியமுதம் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை

கவியமுதம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன்
உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
நம் வாழ்க்கையில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன் வாழ்ந்த அறிஞர்களின் சாதனைகளைப் பேசி உளம் மகிழ்ந்து பாராட்டுவோம்.அவர்கள் தமிழுக்கு எங்ஙனம் உழைத்து தங்கள் வாழ்க்கைப் பதிவினை நிறைவேற்றினார்கள் என மெய்சிலிர்ப்போம்.அத்தகைய நினைவு கூர்தல் கண்டிப்பாகத் தேவை.அத்தகையப் பாராட்டுதல் உணர்வு இல்லையென்றால் வளரும் சமுதாயம் நம்மை நன்றியுணர்வு அற்றவர்கள் எனக் கூட விமர்சித்து விடலாம்.
பல தடவை பல அறிஞர்கள் அவர்களது மறைவுக்குப்பின்னரே பாராட்டப்படும் போது நாமாகவே நாணி நமது தலையைத் தாழ்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி நம்மை அவமானப்படுத்தும்.
பலர் தாங்களாகவே பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்து உண்மையில் தொண்டாற்றிய அறிஞர்களை விட குறைந்த சில காலம் பாராட்டுப் பெறுவதுண்டு. உண்மையான அறிஞர்களின்,உழைப்பாளிகளின் உழைப்பு வெளிச்சத்துக்கு வரும் போது தானாகவே கீழேத் தள்ளப்படுவதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
வாழ்ந்தவர்களை எங்ஙனம் வாழ்த்துகின்றமோ அதே அளவு வாழும் அறிஞர்கள், உழைப்பாளிகளின் உழைப்பைப் பாராட்டுதல் நம் கடமை.
மேற்கூறிய இரண்டு வகையினையும் நான் ஆற்றி வருவதாகவே நினைக்கின்றேன்.
என் பணியின் காரணமாக பாராட்ட மனமிருந்தாலும் பலரை உடனுக்குடன் பாராட்ட வழியில்லாமல் வருந்துவதுண்டு.
அங்ஙனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது இலக்கிய நண்பர் கவிஞர் இரா. இரவி பாராட்டப்பட வேண்டியவர்.
தன் குடும்பச் சூழ்நிலையால் கல்லூரிச் சென்று நேரடிக் கல்விப் பயில இயலாமல் தொடர் கல்வித் துறை மூலமாக பட்டம் படித்தவர்.
இன்று சில பல்கலைக் கழகங்கள் அவர் எழுதியக் கவிதைகளைத் தங்கள் பாடப் பத்தகத்தில் வைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
அதை விடச் சிறப்பாக அவரிடம் நான் கருதுவது தமிழை வைத்து அவர் பிழைக்கவில்லை.
தொடர்ச்சியாக நான்கைந்து இலக்கிய மேடைகள் கிடைத்தவுடன் தொடர்ந்து மேடைகளைத் தங்கள் தொழில் களமாக மாற்றித் தன் தலைக்கும் தமிழறிவுக்கும் விலை நிர்ணயிக்காத தமிழ் ஆர்வலர்.
பொருளாதாரம் தேவைத் தான் என்றாலும் அதற்காக தன் நாவினைச் சுழற்றி நடித்து கச்சேரி நடத்தத் தெரியாத தமிழ் ஆர்வலர்.
நான் பழகும் 20 ஆண்டுகளும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் நாள்தோறும் தமிழுக்கு உழைப்பவர், அதனால் தான் என் நண்பராகத் தொடர்ந்து விளங்குகின்றார். நாங்கள் கடந் 20 ஆண்டுகளாக தமிழுக்கு ஏதோ சிறு வகையில் உழைக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.பலர் கொஞ்ச காலம் தொடர்வது, பின் பல காலம் காணாமல் போய் தங்கள் தேவைக்குத் தீடிர் எனத் தோன்றுவது போன்று நாங்கள் இல்லை. எதையாவது செய்து கொண்டே உள்ளோம்.
என்னைப் போல் பல இடங்களுக்கு,மாவட்டங்களுக்கு பணிமாறுதல் இல்லாமல் பெரும்பாலும் தனது சுற்றுலாத்துறையில் மதுரை மாவட்டத்தில் பதவி உயர்வு அடைந்து மாவட்ட சற்றுலா உதவி அலுவலராக இருப்பினும் ஓய்வு நேரத்தை தொடர்ச்சியாக நம் தமிழுக்கு கைம்மாறு பாராது 14 நூல்கள் படைத்துள்ளார்.
நூல் வெளியிடும் போதெல்லாம் படி ஒன்றினை வழங்கி கருத்தினைக் கூற அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
நூல்கள் கிடைத்தவுடன் இரவு ஓய்வின் போது உடனுக்குடன் தொலைப் பேசியில் பாராட்டிவிடுவேன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வானதி பதிப்பகம் வெளியிட்ட "கவியமுதம்" நூலின் படியினை இரண்டு வாரங்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் தந்து விட்டுச் சென்றதை பல அலுவல் நெருக்கடிக்கிடையில் படித்து பெருமையடைந்தேன்.
எளிய மனிதர்களுக்குக் கூட புரியும் வகையில் நாம் அன்றாட நிகழ்வுகளைத் தலைப்பாகக் கொண்டு கவிதைகள் புனைந்துள்ளார்.
அச்சகத்துறையில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ள வானதி பதிப்பகம் தமிழகத்தின் முன்னணித் தமிழறிஞர்கள் நம் தமிழக அரசின் உயர் அதிகாரி இறையன்பு அய்யா, எனது மானசீக தமிழ் பேராசிரியர் முனைவர் இரா மோகன் ஆகியோரது அணிந்துரையுடன் வெளியிட்டு சிறப்புச் சேர்த்துள்ளது.
வாழ்த்துவது என் கடமை. நம் கடமை.தமிழ் கூறு நல்லுலகத்தின் கடமை.
.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810 . 24310769.