கோட்டோவியம் மழலைகள்

தங்கத் தொட்டிலிட
செல்வம் இல்லையாதலால்
சந்தத் தொட்டிலில்
தாலாட்டுகிறேன் உறங்கடா நீ .....

உயிரே உணர்வே
புது உறவே தமிழ் மரபே
மயிலே மலர்மணமே
புது வரவே குல வரமே...

குப்புறபடுத்தாய் குதூகல குமிழ்கள்
வீடெங்கும் இனி
தப்பாமல் தவழ்ந்திடு.
உலக இன்பம் எங்கள் மடியில்

குமிழிடும் உன் சிரிப்புக்குள்
குவலயம் அடங்காது
இமியேனும் இடர் உனக்கினில்
தாங்காது இந்நிலம்

உதித்து எழும்
ஆதவன் போல்
இதழ் விரி
குதித் தோடும்
நதி நீராய்
பாதம் பதி

எத்தனை எத்தனை
மொழிகள் நீ பேசுகிறாய் -அவை
அத்தனையும் என்
தமிழ் விட சிறந்ததா சொல்.?

எத்தனை எத்தனை
அசைவுகள் செய்கிறாய்
அத்தனையும் எவரிடம்
கற்றாய் அதிசயமாய்?

எத்தனை எத்தனை
பாவங்கள் காட்டுகிறாய்
அத்தனையும் அகராதிக்குள்
அடங்கா ஒளிமுத்திரைகள் ....

குரலெழுப்பி குப்புறப்படுத்தாய்
கூவு குயிலே இனி
விரல்பிடித்து நடைபழகி
இசை எழுப்பு இனிமையே

மழலை மொழி
மயக்கும் போதையோ சொல் நீ
தமிழை மிஞ்சும் சுகம்
பின்னெப்படி உன்னுரையில்

எழுதியவர் : அகன் (13-Mar-15, 5:14 pm)
பார்வை : 208

மேலே