இதற்குத் தானா சுதந்திரம்
மூவர்ணக் கொடிக்கு
முகவரித் தந்த
முன்னோர்களே.
இரவில் அல்லவா
வெளிச்சம் தந்தீர்கள்.
வெளிச்சத்தில் அல்லவா
நாங்கள் - சுதந்திர
விலாசத்தைத் தேடுகிறோம்.
தேசியக் கொடியின் நிறத்தைவிட
தேசத்தை தேய்க்கும்
நாசக்காரக் கொடிகளின்
நிறம்தான் அதிகம்.
தமிழகத்தில்
பாதகமானவர்களின்
பாதங்களில் அல்லவா நாங்கள்
வேதங்களைக் கற்கிறோம்.
இதற்குத்தானா சுதந்திரம்?
சாதிக்கொரு சங்கம்
சாதிக்குமா என்ன?
சாதிக்கொரு சங்கத்தில் அல்லவா
சாதனைகளை தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றுபட்ட மக்களை
ஒடுக்கப்பட்ட மக்களாய்
ஒட்டுப் போடவைத்து
ஓட்டு வாங்கும் கூட்டத்தால்
ஒழுக்கத்தை இழந்து
அழுக்கானவர்களை
அழகுப் பார்த்து
அலைகின்றோம்.
இதற்குத் தானா சுதந்திரம்?
வாய் நிறையப் பொய்யை சுமந்து
வெள்ளைநிறத்தில் - சில
வேங்கை மனிதர்கள் - தன்
பங்கை பாமரர்களிடம்
பாவ மனிதர்களாய் மாற்றி
புனிதனாய் திரிகின்றார்கள்.
இதற்குத் தானா சுதந்திரம்?
பாலுக்குள் கலந்த நஞ்சைப் போல்
பாருக்குள் சில நஞ்சுகள்
மகாத்மாவாய் காட்டிக் கொண்டு
கசப்பான பொய்களை
கவலை இல்லாமல் தெளிக்கின்றது.
இதற்குத் தானா சுதந்திரம்?
ஆளும் திறன் இல்லாதவர்கள்
நாளும் ஒரு வேஷத்தில்
நல்லவனைப் போல்
வல்லவனாய் வலம் வருவதை
வேடிக்கைப் பார்க்கவா சுதந்திரம்?
தமிழகத்தை சுருட்டிடவே
தன் அகத்தே உள்ள பொய் மூட்டைகளை
தாராளமாய் மேடை ஏற்றி
தம்பட்டம் போடுகிறவர்களை
தலைவனாய் ஏற்றோரின்
தொண்டர்களாய் திரியும்
தேய்மானக் கொடி ஏந்தும்
தரங்கெட்ட மனிதர்களை
அடையாளம் காட்டவா
இதற்குத் தானா சுதந்திரம்?
கட்சிக்குள் சிக்காதவர்களே
எதற்குத் தான் சுதந்திரம்?
என்பதை கொஞ்சம் விளக்குங்களே.