அவளாகிய அவன்

பச்சப்புள்ளயா அவன் இருந்தப்ப
களிமண்ணுல அவன்செஞ்ச
அர்த்தநாதீஸ்வர சாமிக்கு
வேட்டியும் சேலயும்
கட்டி அழகு பார்த்தான்.

கைதட்டி பாராட்டின சொந்தங்க
கையெடுத்தும் கும்பிட்டாங்க

பதினாலு வயசு ஆனப்போது
பாசி மணிக்கும்
பாவாடை தாவணிக்கும்
ஆசப்பட்டவன கண்டிச்சி
பாலூட்டின ஆத்தா
முகம் சுளிச்சா
அன்பூட்டின அப்பன்
அடிச்சி துவைச்சான்
பாசம் காட்டின தாய்மாமன்
பரிகாசம் செஞ்சான்.

நொந்தமனசுல வூட்டுவிட்டு
வெளியேறிய அவன
தெருல இருக்கும் நாய்களோடு
ஊருல இருக்கும் மனுஷநாய்களும்
தொரத்திச்சி அவன் சதைக்கு.

அர்த்தநாதீஸ்வருக்கு
ஆலயம் கட்டின ஜனத்துக்கு
அர்த்தம் தெரியாம போச்சே
அவன் மாற்றத்துக்கு.

அவளாகிய அவன-அலின்னு
சொல்லிச்சு சமூகம் -குரோமோசோம்
தகராறுன்னு சொல்லிச்சு மருத்துவம்
அதுன்னு சொல்லிச்சு ஆண்வர்க்கம்.
ச்சீன்னு சொல்லிச்சு பெண்வர்க்கம்
திருநங்கைன்னு சொல்லிச்சு அரசாங்கம்

யாருமே ஏன் சொல்லமாட்டிங்கிறாங்க
அவன அவள மனுஷன்னு ?

எழுதியவர் : அமுதினி (17-Mar-15, 9:45 am)
பார்வை : 135

மேலே