மழை நேரத்தில்
இந்த அழகான
மழை நடுவில் ..
ஏன் பயமுறுத்தும்
இந்த இடியும்
மின்னலும்..?
மழை ஓய்வதற்கு
ஏன் இந்த
வண்ணத்துப் பூச்சிகள்
இத்தனை அவசரம்
காட்டி...
குருகுறுக்கின்றன..?
இவ்வளவு செய்தும்
எப்படி வருகிறது
இந்த மழை ..
என்று வியந்தபடி
கவலைக் குடைகளுக்குள்
ஒளிந்தபடி ..மனிதர்கள் ,
தனக்கு மட்டுமே
கிடைத்த பரிசு போல
சிரித்தபடி
கைகளில் மழையை
வாங்கும் சிறுமி..!
மழையின் அமைதிக்
கிசுகிசுப்பை
அலட்சியம் செய்யும்
ஆணவ சுவர்க் கோழிகள் ..
என்னைச் சுற்றிலும்..!
அய்யா..
வெகு நாட்களாய்
விசாரிக்காத
பிள்ளையின் விலாசம்
தாங்கிய
மழையோ..கண்ணீரோ
நனைத்த காகிதத்தை
காட்டியபடி முதியவர் ..வாசலில்..!
மனைவியின் ஊருக்கே
மாற்றல் வாங்கி
போய்விட்ட மாமனிதனின்
தொலைத்த விலாசம் ..அதில்..
இல்லாத முகவரியை
எப்படி சொல்வேன் அவரிடம்..
நீயாவது சொல்லிவிடு
மழையே..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
