கண்ணகியா கற்பரசி

அதிகம் படித்து ஆணவம் படிந்த
நண்பநோடோருநாள் வாய் சண்டை.

கேள்விக்கணைகள் பறந்தது பலவும்!
விடைகள் கூட விரைந்தே வந்தது.

இறுதியில் கேட்டேன் அவனிடம் கேள்வி
"கற்பின் அரசி" யாரோ என்று.

நண்பன் சிரித்தான் ...
பின்னர் உரைத்தான் .

நாடே அறியும் நாயகி செயலை!
நீயோ அறியா கேள்வியை கேட்டாய்
கேட்டதால் நானும் கேட்டதன் பதிலை
சொல்வேன் கேளாய் என்றே கூறி.
கற்பின் அரசி "கண்ணகி" என்றான்.

கேட்டதும் சிரித்தேன்
சொன்னவன் விழித்தான்!

சிரிப்பின் பொருளை விளக்கிடு என்றான் - என்
சிரிப்பால் கோபம் இருந்தது கண்ணில்.!

காவியம் படித்த நண்பா சொல்வாய்
கற்பின் அரசி "கண்ணகி" தானோ?
கேட்டேன் நானும் நிறுத்தா சிரிப்புடன்.

ஆமாம்! ஆமாம்! ஆமாம்!!! என்றான்.

முடிக்கும் வரை காத்திருந்து பின்
பதிலை உரைப்பாய் இறுதியில்,
என்றே கூறி கேள்விகள் தொடுத்தேன்.

நீங்களும் கேட்பீர் எந்தன் கேள்வி
முடிவில் உரைப்பீர் உங்கள் பதிலை.

என் கேள்விகள் இதோ...

தன் கணவன் கீழ் கண்ணால்
வேறு பெண்ணை பார்த்தாலும்
வெகுண்டேழுவால் பெண்ணொருத்தி.

மறு பெண்ணை தொடுவதற்கு
தன் நகையை கொடுத்தனுப்பி
அனுபவித்துவிட்டு வருக என்ற
கண்ணகியா கற்பரசி ?

தடம் மாறும் துணை அவனை
தடுத்திடவும் வக்கின்றி
திருத்திடவும் திறனின்றி
நீ திருந்தி வரும் வரைக்கும்
காத்திருப்பேன் என்று கூறி
பார்த்திருந்த பத்தினியாம்
கண்ணகியா கற்பரசி ?

காதல் வயப்பட்டவனும்
காலமெலாம் வாழ்ந்திருப்பான்
கட்டியவள் இன்பத்தை
வழங்குவது உண்மையெனில்

கிடைக்காத சுகத்துக்காய்
மற்றவளை தேடிப்போன
கணவனுக்கு மனைவியான
கண்ணகியா கற்பரசி ?

ஆணுக்கும் கற்புண்டு
கூறியது தமிழ் நூல்தான்
கற்பிழந்த கணவனுடன்
வாழ்க்கைதனை நடத்திட்ட
கண்ணகியா கற்பரசி ?

குற்றமுள்ள கோவலனை
குற்றமற்ற மன்னவனும்
கொன்றதுவும் குற்றமில்லை.
குற்றங்கள் வேறாகும்
குற்றவாளி கோவலந்தான்
தீர்பளித்த மன்னவனை
கொன்றுவிட்டு சிரித்திட்ட
கண்ணகியா கற்பரசி ?

தாசி வீடு போனவனை
அழைத்துடனே வாழ்வதற்கு
காற்சிலம்பை கழற்றி தந்து
வழியனுப்பி நின்றிட்ட
கண்ணகியா கற்பரசி ?

கை மீறிப்போனவனை
கேட்பதற்கு நாதி இன்றி
காற்சிலம்பை கழற்றி தந்து
காதல் பாட்டு பாடி நின்ற
கண்ணகியா கற்பரசி ?

வாழ்க்கை அது எப்போதோ
சிதறியதை அறியாமல்
காற்சிலம்பை சிதற வைத்து
மன்னவனை கொன்று விட்ட
கண்ணகியா கற்பரசி ?

தவறிழைத்த தன் கணவன்
மாண்டுவிட்ட மறு நிமிடம்
மாண்டுவிட்ட அரசி முன்னே
உயிரோடு நின்றிருந்த
கண்ணகியா கற்பரசி ?

தவறிழைத்த தன் கணவன்
மறைந்து விட்ட பின்பேதான்
காற்சிலம்பில் உள்ள கற்கள்
முத்தானால் என்ன?
பரல் ஆனால் என்ன??

தன் தவறை மறைப்பதற்கு
மாநகரை எரித்து விட்ட
கண்ணகியா கற்பரசி ?

செய்தொழிலை மறந்து விட்டு
தாசி வீடு கதியென்று
மதி கேட்டு போனவனை
விட்டு விட்டு வாராமல்
அவன் வருவான் என்றெண்ணி
ஏங்கி நின்று காத்திருந்த
கண்ணகியா கற்பரசி ?

பொன் வேலை செய்வதுவே
தன் வேலை என கூறி
மாலை இட்ட மனைவிதனை
தூரம் விட்டு போனவனை
தாங்கி நின்று காத்து நின்ற
கண்ணகியா கற்பரசி ?

மகுடி கேட்ட பாம்பாக
மாதவி மடி மீது
ஆடி நின்ற கோவலனின்
ஆட்டம் நின்று போன பின்பு
வாழ்வுக்கு வழி சொன்ன
கண்ணகியா கற்பரசி ?

கற்புக்காய் என்ன தியாகம்
செய்து விட்டால் கண்ணகியும்?
அரசி என்று கூறுதற்கு
என்ன பொருள் உண்டு இங்கே?

கெட்டழிந்த தன் கணவன்
வந்திடுவான் என்றெண்ணி
காத்திருந்த காரணத்தால்
கற்ப்புக்கு அரசியா?

இல்லாத கணவனுக்கு
ஏங்கி ஏங்கி நின்று விட்ட
ஏக்கத்தால் அளித்தீரோ
அரசி எனும் பட்டத்தை.

கண்ணகி வாழ்க்கை பற்றி
கதை சுருக்கம் கூறுகிறேன்
கவனமாக கேட்டிடுவீர்

கட்டியவன் பொற்கொல்லன்
சுற்றி வந்தான் மாதவியை
கண்ணகிதன் வாழ்கையோடு
சுகத்தினையும் எடுத்து கொண்டு
மாதவிக்கு தந்திட்டான்.

வாங்கி கொண்ட மாதவியும்
வகை வகையாய் இன்பத்தை
விருந்தாக அளித்து விட்டாள்.

கசந்து விட்ட விருந்தால்
திரும்பி வந்த கோவலனை
வாழ்ந்திடுவோம் இனி இணைந்து
என்று கூறி ஆசையோடு
காற்சிலம்பை அளித்திட்டாள்.

கொண்டு சென்ற கோவலனை
கொன்று விட்டார் மன்னவனும்
அது கூட திருடனென்ற
சந்தேக காரணத்தில்.

சந்தேகம் தீர்ந்த போது
உயிர் இல்லை மன்னனிடம்
உயிர் நீத்த மன்னவனின்
உடல் மீது சாய்ந்திட்டு
உயிர் விட்டாள்
பட்டத்து ராணி அவள்.

வெகுண்டாலாம் கண்ணகி...
அழித்தாலாம் மதுரைதனை
அதனால் அரசியாம் கற்புக்கு .

எப்பென்னும் செய்யாத
எச்செயலை கண்ணகியும்
செய்துவிட்டால் இக்கதைஇல்

உண்மைதனை சொல்வதானால்
மன்னனோடு உயிர் விட்ட - அந்த
அரசியன்றோ கற்பரசி !

இவை எல்லாம் கேட்ட பின்பு
இறுதியல் நான் கேட்கின்றேன்

கற்பரசி யார் என்றால்
உன்னை பெற்றவளோ....
நீ கொண்டவளோ ....
நீ பெற்றவளோ ....
அன்றி
உன் உடன் பிறந்தவளோ...
இவர்களும் தான் பெண்களன்றோ
இவர்கள்கூட உன் கண்ணில்
கற்பரசி ஆகவில்லை...

தவறான கணவனுக்கு
துணை போன கண்ணகிதான்
கற்பரசி ஆனாளோ?

எனக்கான சந்தேகம்
அதனால்தான் கேட்கின்றேன்
தவறிருந்தால் திருத்துங்கள்
புரிந்து கொள்ள முயல்கின்றேன்.

என்றேதான் முடிக்கின்றேன்
இனி பதிலை நீர் உரைப்பர். !

எழுதியவர் : sujatha (20-Mar-15, 12:50 pm)
பார்வை : 103

மேலே