சுமை தூக்கி

ஜெயபேரிகையின்
கொக்கரிப்பில்
கர்வத்தினைக் குழைத்து
குருதிவடியும்
தன் புண் வாய்களில்
பூசிக்கொண்டு
மார் தட்டும்
விழுப்புண்களுக்குத்
தெரியாது ....
துரோகிகளின் கதையையும்
துரோகங்களின் வரலாற்றையும்
சுமந்து
வெறுப்பின்
ஈய்க்கள் மொய்க்க
வெதும்பிக் கிடக்கும்
புறமுதுகுப் புண்களின்
புலம்பல் ....
பார்த்து ரட்சிக்க
கண்களும் -
காத்து ரட்சிக்க
கவசங்களும் பூட்டிய
மார்புகளுக்குத் தெரியாது
கண்களேதுமற்று
கவசம் துறந்து
திறந்த வெளி
முதுகில் -
துரோகத்தின் கொடுமைகள்
பாய்ந்த
குரோதத்தின் குமுறல்கள் ....
பதக்கங்களை மட்டுமே
மாட்டிக்கொண்டு திரியும்
மார்புகளறியாது-
பறிபோன வெற்றியின்
வேதனை வடுக்களை
சுமந்து திரியும்
முதுகுகளுக்கு மட்டுமே
காலமெல்லாம்
சுமைகளைச் சுமந்தே
தீர்க்க வேண்டிய
கட்டாயம் உண்டென்பது....
முதுகுகள் சுமை
தாங்க முடியாவிடில்
மார்புகள்
பதக்கம் சூட்ட முடியாது .