மரமாய் துணிவை நடு

எப்படியும் வாழலாம் என்ற நிலைமாற்றி
இப்படித்தான் என்னும் விதிசெய்தே – முப்பொழுதும்
அந்த அறமொழுகி ஆனந்த பூங்காற்றின்
நந்த வனம்நீ சமை.

நேற்றெவரோ செய்த நிலையற்றக் காரியத்தின்
ஊற்றொழுகும் நீரின் உவர்ப்பகற்ற –ஆற்றும்
கருமம் அகிலம் கடைபிடிக்க மூட்டும்
நெருப்பின் ஒளியாய் நிலை.

உலகம் விரும்பும் உயர்வு நிலைக்கு
நிலவின் பொழுதாய் இருந்து .- நிலவும்
பழமை இருளுள் பதுங்கிக் கிடக்கும்
வழக்கம் அடித்து விரட்டு.

மடுவை எடுத்து மலையாய் சமைத்து
கொடுக்கும் திறமை வளர்த்து – நடுநீ
அதன்மேல் மரமாய் உனதின் துணிவை
அதர்மம் வளர்தல் தடுத்து.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Mar-15, 2:35 am)
பார்வை : 77

மேலே