உனக்கும் எனக்குமான ஒற்றுமைகள்

பெண்கள் பிரிவில்
மூன்றாவது பெஞ்சில்
முதலாவதாய்
நீயும்,
ஆண்கள் பிரிவில்
மூன்றாவது பெஞ்சில்
முதலாவதாய்
நானும்
அமர்ந்திருந்தது ...........
தமிழ் வகுப்பில்
கலிங்கத்துப் பரணியின்
ஆசிரியர் பெயர் கேட்டு
கைதூக்கச் சொன்னபோது
நம்மிருவர்
கைகள் மட்டும்
ஒருசேர உயர்ந்தது .........
வகுப்புத் தோழனின்
தங்கை திருமணத்தில்
சாப்பாட்டுப் பந்தியின்
அந்தக் கோடியில்
உனக்கும்
இந்தக் கோடியில்
எனக்கும்
இலைதீர்ந்து போனது ..........
வேதியியல்
செய்முறைத்தேர்வில்
லெட் நைட்ரேட்டும்
பேரியம் சல்பேட்டும்
உனக்கும் எனக்கும்
ஒன்றாய் வந்தது ...........
இரண்டாம் செமஸ்டர்
முடிவில்
நம்மிருவர்
மதிப்பெண் சதவிகிதமும்
75.13 என்று இருந்தது .......
எல்லாம்
சரி !
ஆயினும் .....
கல்லூரியின்
கடைசி நாளில்
சொல்லவந்ததைச்
சொல்லாமலே
போய்விட்டதிலும்
நாம்
ஒற்றுமையாய்
இருந்து தொலைத்தோம் !