நன்றி நிமித்தங்கள்- Mano Red
பொய் மட்டும்
இல்லையென்றால்
அதிசயமும், அபூர்வமும்
நிலைத்திருக்காது..!!
இப்படி சொல்லுதலின்
உண்மை வீச்சுகளில்
என்னை ஒளித்திருக்கும்
வாய்மைக்கு ஒரு நன்றி..!!
பருவ வயதில் முளைத்த
மீசை ஞாபகம் மறந்திருந்து,
அந்த அவசர கதியில்
ஆளில்லாத தன்னந்தனிமையில்
எஞ்சிய உணவுகளில்
என்பெயரை எழுதி அனுப்பிய
யாரோ விவசாயிக்கு ஒரு நன்றி..!!
மீச்சுருங்கிய பொழுதுகளின்
பண்பட்ட பாகுபாட்டில் ,
நிலைக் கண்ணாடியும்
முகம் திருப்பியது..!!
முக பிம்பங்களின் எதிர் நிழலும்
துன்பங்களையே பிரதிபலித்த போது
தடுமாற விடாத
தன்னம்பிக்கைக்கு ஒரு நன்றி..!!
சூடுபட்ட இடத்தில்
கண்மையளவு
கறுத்துப் போனதற்கே
கலங்கி விடுவதா...??
புறக்கணிக்கப்படுவதும்,,
புறந்தள்ளுவதும்
காலத்தின் புணர்தலென சொன்ன
அனுபவத்திற்கு ஒரு நன்றி..!!
உப்புக் கல் கொண்டு தேய்த்தாலும்
சொரணை அறியாத
வெக்க, மானத்திடம்,
இங்கே பார்
புண்பட்டதில் விழும் எச்சிலாய்
இதுவும் கடக்குமென
உறைக்கும்படி காட்டிய
அவமானத்திற்கு ஒரு நன்றி..!!
சீக்காளியாய் இருக்கும்
கணவனின் துணியை,
முகர்ந்து பார்த்த பின்பும்
முகம் மலர்ந்து துவைக்கும்
மனைவியின் பொறுமையை
விரைவில் பழக்கப்படுத்திய
சூழ்நிலைக்கு ஒரு நன்றி..!!
இப்படி நன்றி நிமித்தங்களுடன்
தேடும் வரை ஓடலாம்,
எழும் வரை விழலாம்,
வலிக்கும் வரை அடிபடலாம்,
போதும் போதுமென்கிற வரை
நம்மை நாம் துன்புறுத்தலாம்,
இப்படித் தானே வாழக் கூடாது
ஆனால்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தானே.!!