சட்டப்பிரிவு 66 - ஏ
வணக்கம் தோழர்களே...
இன்று ஒரு நற்செய்தியை நாளிதழில் வாசித்தேன். நீங்களும் வாசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதாவது இணைய தளங்களில் மற்றும் பிற ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து. இதுதான் அந்த நற்செய்தி.
இதில் சந்தோசம் நிறைய இருந்தாலும் சிறிது சங்கடமும் இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கண் முன்னே ஒரு தவறு நடக்கின்றது, ஆனால் அதைப் பற்றிய கருத்தினை நாம் வெளியே கூறுவது என்பது மிகவும் பிரச்சனையாக இருக்கிறது. தனி நபர்கள் பிரச்னை ஒருபுறம் இருந்தாலும்கூட. மறுபுறம் சட்டமே பிரச்சனையாக இருந்து வந்தது. இன்று அந்த சட்டம் 66 ஏ ரத்தாகிப்போனதனால் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் சங்கடமான விடயம் என்னவென்றால் சட்டம் ரத்தாகிவிட்டது என்ற துணிச்சலில் மனசாட்ச்சிக்கு விரோதமான பொய்யான தகவல்களை அல்லது பொருந்தாத செயல்களை யாரும் செய்துவிடக்கூடாது என்பதுதான்.
மற்றப்படி இந்த சட்டம் ரத்தானது வரவேற்கத்தக்கது ஆகும், அண்மையில் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த கதியை நீங்கள் அறிவீர்கள். பால் தாக்ரே மரணத்தை முன்னிட்டு மும்பையில் கடையடைப்பு நடத்தினார்கள், அதை விமர்ச்சித்து முகநூலில் கருத்திட்ட இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டதையும் அறிவீர்கள்.
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சட்டமான 66 ஏ பிரிவை எதிர்த்து பலரும் வழக்கு தொடுத்தனர். நமது எழுத்து தளத்தில்கூட பாருங்கள் கவிதைய தட்டச்சி செய்து பதிவிடும்போது.
முதல் கட்டத்தில் பிரிவுகள் கேட்கும்
இரண்டாம் கட்டத்தில் படைத்தவர்கள்
மூன்றாம் கட்டத்தில் கவிதையின் பிரிவு கேட்கும்
நான்காவதாக கருத்திடும் அனுமதி உண்டா இல்லையா என்பதற்கு ஒரு சிறு பெட்டி இருக்கு அதில் அம்புக்குறியை வைத்து சொடுக்கலாம்.
ஐந்தாவதாக பாருங்கள் நிபந்தனைகள் என்று தலைப்பிட்டு அங்கே ஒரு பெட்டி இருக்கிறது கிழ் காணும் நிபந்தனைகளாக குறிப்பிடப்பட்டு உள்ளன.
நிபந்தனைகள்:
* இந்த படைப்பு தனிப்பட்ட நபரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.இந்த படைப்பில் எந்த காப்புரிமை மீறல்களும் இல்லை.
[குறிப்பு:உங்களின் படைப்பு அல்லது கருத்துக்கள் ஒருவரை தாக்கிப்பேசுவதாகவோ, கொச்சைப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ, அபாயகரமானதாகவோ, பயமுறுத்துவதாகவோ, சட்டத்திற்கு புறம்பானதாகவோ, தரம்குறைவானதாகவோ மற்றும் பெருமை குலைப்பதாகவோ இருந்தால் அது சட்டப்படியான (Section 66A of IT ACT) நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படித்தான் எழுத்து தளத்திலும் இருக்கிறது. இப்பொழுது இந்த 66 ஏ சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது, ஆகையினால் இந்த நிபந்தனைகள்கூட இனி செல்லாது.
இந்த சட்டப்பிரிவினால் பல மாணவ மாணவியர்கள் கைது செய்யப்பட்டார்கள், கருத்து பகரும்போதுகூட பயந்துகொண்டு கூறவேண்டிய நிலை இருந்தது. சில விடயங்களை தெளிவாக கூரமுடியாமல் போனதும் ஒரு புறம் உண்டு.
ஒரு ஒரு தவறையும் செய்கிறவன் ஒரு தனிப்பட்ட மனிதனாக இருக்கிறான், அவன் சென்கின்ற அந்த தவறினால் சமூகம் பாதிக்கப்படுகின்றது. அந்த மனிதனின் தவறினை வெளியில் கூறினால் தனிப்பட்ட மனிதரை தாக்குவதாகவோ, அந்த நபரின் மனதை புண்படுத்துவதாகவோ கருதினால், உண்மையை எப்படி வெளியே பேசுவது?
இப்படிப்பட்ட சட்டமும் அதன் நிபந்தனையும் ஏற்று கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். ஊடகங்கள் கருத்து சுதந்திரத்தை தாராளமாக வழங்கவேண்டும்.
சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட கருத்தினை யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கலாம் அல்லது அந்த வலைத்தளம் அதை வேண்டுமானால் நீக்கலாம், இதற்கு 69 ஏ மற்றும் 79 பிரிவுகளை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இது வரவேற்க கூடியதுதான். ஆனால் கருத்து சொல்லக்கூடாது என்றும், சொன்னால் சட்டம் பாயும், சிறை திறக்கும் என்று அச்சுறுத்துவதும் ஏற்கமுடியாத விடயமாகும். இப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு காரணமாக இருந்த 66 ஏ பிரிவை ரத்து செய்யப்பட்டது மிகச் சரியே.
எது எப்படியோ கருத்து சுதந்திரத்திற்கு முழு அனுமதி வழங்கி இருக்கின்றது உச்ச நீதிமன்றம். இதை நாம் எல்லோரும் வரவேற்போம். மனிதநேயமற்ற கருத்தையும், முரண்பட்ட தகவல்களையும் தவிர்த்து மனசாட்சியோடு உண்மையை கூறுவோம் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்.
-----------------நிலாசூரியன்.