கணக்கு

பனிக்காலப் பொழுதொன்றில்
காற்றின் கைகளால்
காயப்படாத
நீர்ப்பறவை
ஒன்றின் சிறகொலி
சந்தம் தப்பாமல்
இரைந்து கொண்டிருக்கிறது
ஒற்றை மரத்துக்கும்
உறைந்து போன
ஏரிக்குமிடையே.

தூங்கும் மரங்களின் கீழ்
தொலைந்த இலைகள்
தூறிச் செல்லும்
பனித்துளிகளால்
காயப்படுத்தப்பட....
ஏங்குகின்ற கிளை ஒன்றில்
அலகுகளைத் தேய்த்த படி
அசையும் குளிர்காற்றில்
வசவில் பசியை மறந்து
பார்த்துக் கிடக்கிறது
அதன் குஞ்சு..

ஓலமிடும் தாய்க்குருவியின்
ஏக்கக் குரல் ஒவ்வொன்றையும்
உறைபனி உடைத்து
தூண்டில் மீன்
பிடிக்கும் அந்தச்
செம்படவன் மீன் கூடை
ஓசை இன்றி
உள்வாங்கிக் கொள்கிறது.
.
வலிமையுள்ளவர் வயிற்றை
நிரப்பும் உணவு
எளியவர்களுக்கு மட்டும்
எட்டாமல் ஏன் இருக்கிறது....
வலியுடன் வட்டமிட்டுச்
செல்கிறது தாய்ப்பறவை

எப்போதும் போல
இப்போதெல்லாம்
செம்படவன் கூடையில் மீன்கள்
தொகை சரியாக இருப்பதில்லை....

மாறாக அவை
காணாமல் போகின்றன.
கடவுள் கணக்கைச்
சரியாக்கிய படியும்
செம்படவன் கணக்கைத்
தவறாக்கிய படியும்.....

எழுதியவர் : உமை (1-Apr-15, 11:38 pm)
Tanglish : kanakku
பார்வை : 66

மேலே