ஈழம்

இந்தியப்பெ ருங்கடலில் ஈழமும் தோன்றுமே
சிந்துமொற்றைக் கண்ணீர்த் திவலையாய் - பந்தமாய்
சுற்றிலும் ஆழிசூழ் சுந்தரத் தீவிதிலே
வற்றாமற் பொங்கும் வளம் .

இயற்கையெழில் கொஞ்சும் இலங்கையின் காட்சி
மயங்கிட வைக்கும் மனதை - முயங்கும்
முகிலும் மலைமேனி மூடி யுறங்கும்
தெகிட்டா அழகிற் சிறந்து.

கற்கண்டாய்ப் பேசி கனிவாய் உபசரித்து
நற்றமிழா ளள்ளிடுவார் நம்மிதயம் - அற்புதமாய்
ஈழத் தமிழரின் இன்முகப் புன்சிரிப்பில்
தோழமைப் பூக்கும் தொடர்ந்து .

கடற்கரை வெண்மணலும் கைதுசெய்யு முள்ளம்
அடவியும் தோன்று மழகாய் ! - இடர்நீங்கி
பாடட்டு மின்பகானம் பாரினில் ஈழமும்
கூடட்டும் மக்கள் குளிர்ந்து .

சுற்றுலா ஆர்வலர்க்குச் சொர்க்கபுரி ஈழமாம்
சற்றே உணர்ந்திடுக சான்றோரே - துற்கதி
நீங்கி இலங்கையில் நீடிக்கும் நிம்மதியும்
மங்கா மகிழ்ச்சி மலர்ந்து .

அன்புநிறை மக்கள் அகமும் மலர்ந்திட
இன்பவெள்ளம் பாயட்டும் ஈழத்தில் - வன்கொடுமை
தோற்றோடிப் போகட்டும் துன்பமெலாம் தீரட்டும்
ஏற்றம் பெருக்கட்டு மே !

( தடாகம் கலை இலக்கிய வட்டம் நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை . "கவிச்சுடர்" பட்டம் கிடைத்ததில் மகிழ்ந்தேன் .
வெண்பா ஆர்வத்தை என்னுள் தூண்டி கற்பித்து , திருத்தி , ஊக்கமளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி .
எழுத்து தளத்திற்கு என் இதயப் பூர்வமான நன்றி )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Apr-15, 6:51 am)
Tanglish : ealam
பார்வை : 81

மேலே