எழில் கொஞ்சும் அயோத்தி
![](https://eluthu.com/images/loading.gif)
எழில் கொஞ்சும் அயோத்தி....
==========================
தெய்வமே ஆண்டதொரு எழில்மிகு அயோத்தியந்த
தர்மம்சூழ் தேசம்காண ஆரை நான் துணைக்கழைக்க??
மனவோசை கவிக்கம்பன் செவிதன்னையெட்டியதோ?
கம்பனே எதிரில் நின்றான், வழிகாட்டியுமானானே...!!!
அண்ட சராசரத்தில் தெய்வமும் தேடிக் காணும்
எழில் கொஞ்சும் நகரமதை கம்பனுடன் ரசிக்கின்றேனே.!
பூமித்தாய் திலகமென அவள் மார்பில் ஆரமென
நிலமகளின் விழிகளென உயிரெனவே அயோத்தியழகோ.!..அழகு.!
அயோத்தி பாதம்பட அற்புதமென வரவேற்பு
இயற்கை நடத்திடுதே தேனினிமை இசைநிகழ்வு
மேகங்கள் மத்தளங்கொட்ட வண்டினங்கள் ரீங்காரமிசைக்க
கருங்குவளை கண்டுரசிக்க கானமயில் நடனங்களெனவே...!!
சரயுநதியை தென்றல்வருடி மெய்யதனை வந்தேயணைக்க
உள்வாங்கும் சுவாசத்திலெல்லாம் நறுமணமே பரவ பரவ....
செவிக் கெனவும்விருந்து.... விழிக் கெனவும்விருந்து
சொர்க்கம் புகுந்தேனோ.. கனவோ... நனவோ நானறியேனே..!!
மேகந்தொடுமுயர மதிலும், சூலங்கள் சிரமே சூட்டி
காக்கும் துர்கைப்போல் காட்சியது மதிலின் காட்சி
ஆழியைப்போல் அகழியிருக்க ஆபத்தாய் முதலையிருக்க
எதிரியெவர் நெருங்கிடவியலும் யுத்தமிலா அயோத்திதனையே.!!
விலைமகளின் மனதையொக்கும் ஆழமறியா அகழி விளிம்பில்
தாமரைகள் தலையசைக்கும் மீன்களதில் துள்ளியே மகிழும்
கதிரவனும் நிலவும் நாளும் சிவராத்திரி தனையே காணும்
அயோத்தி எழிலினைக் கண்டு விழி துஞ்ச மறந்தே போகும்..!!
சித்திரத்து பெண்புறாதனையே ஆண்புறா கொஞ்சியே நிற்க
துணைப்புறாவிதனைக் கண்டே துயர்கொண்டு மடிந்தே சாய
எழுநிலை மாடங்களிலெல்லாம் உயிரோவிய காட்சிகளாக
சித்திரங்கள் யாவையுமே உயிர்கொண்டு விசித்திரங்களாக.!!.
பசும்புற்கள் மேயுமந்த ஆவினங்கள் அழகு காட்சி - ஆவும்
கன்றதுவின் நினைவே கொள்ள மடிசுரக்கும் பாலருவி
ஆங்காங்கே அன்னப்பட்சி பாலருவியில் பசியாறும்
காண்போரின் விழிகளுக்கெல்லாம் காட்சியது விருந்தாகும்...!!!
அயோத்தியின் வாயிற் கதவோ வாமனன் வானளந்த உயரம்
வாழும் மக்கள் இல்லந்தனிலே இல்லையே கதவுகள் எங்கும்
கள்வர்கள் எவருமில்லை களவெதுவும் நேர்வதுமில்லை
செழுமைமிகு மாநகரெங்கும் சீர்கேடுமெவையுமிலையே.!!
பொன்மணிகள் குவிந்து கிடக்க... மும்மாரி மழையுமிருக்க
விளைநிலமோ வாரி வழங்க தானியங்கள் குன்றுகளாக..
யாசகரெவருமில்லை..வறுமைக்கங்கிடமும் இல்லை
பொய்யர்கள் யாருமில்லை வாய்மையின் சிறப்பில் பெரிதாய்.!!
இளம்பெண்டிர் குதலைச்சொற்கள் மதுரகுழலி னிசையாய்
பருவத்துப் பெண்டிர் சொற்கள் மகரயா ழிசையினை வெல்லும்
கற்புடை நங்கையரோடு தெய்வமாய் ஆடவர் வாழும்
அயோத்தியொரு தேவலோகம் அழைத்துச்சென்ற கம்பனுக்கென்நன்றி..!!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
(குறிப்பு : கடந்த மாதம் பாரதியார் இலக்கிய மன்றம் நடத்திய கம்பன் விழாவில் வாசித்த கவிதை இது. திரு திருவை பாபு அவர்கள் இந்த தலைப்பினை கொடுத்து என்னை எழுத பணித்தபோது கொஞ்சம் திணறித்தான் போனேன். இதிகாசம் அதுவும் இராமாயணத்தை வைத்து எழுதுவது இதுவே முதன் முறை. மூத்த சான்றோர்கள் நிரம்பிய மேடையில் இதனை வாசிக்க சற்று பயமாகத்தான் இருந்தது. அனைவரும் கம்பராமாயணத்தை கரைத்து குடித்தவர்களாக இருந்தார்கள். படித்து முடித்தபோது அனைவரின் வாழ்த்தும் கிடைத்ததில் மகிழ்ச்சி. தலைப்பினை அளித்து இதனை எழுத தூண்டிய திரு திருவை பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்)