கடவுளே மௌனம் ஏன்

யாரிடம் கூறுவேன் ? யாரிடம் கூறுவேன் ?
யாரிடம் கூறமுடியும் ?
தேரிடம் அமர்கிறாய் தெருவலம் வருகிறாய் .
தீபத்தில் ஒளிர்கிறாய் நீ
ஓரிடம் கொள்ளைகள் ஓரிடம் ஏமாற்று
ஓரிடம் பொய்கள் கூட்டம்
மாறிய மனிதனின் வஞ்சகம் பார்த்தும்நீ
மௌனமாய் இருக்கலாமா ?

அநியாயம் பெருகின அக்ரமம் பெருகின
ஆசைகள் கூடிபோச்சு.
மனிதமே தோற்றது , தவறுகள் போற்றுது ;
வன்முறை கூடிப்போச்சு.
புனிதர்கள் வாழ்ந்ததாய் புகழுரை சொன்னதில்
பொழுதுகள் ஓடிப் போச்சு
இனியுமா மௌனத்தில் இருக்கிறாய் தெய்வமே !
எவன் எம்மைக் காக்க வருவார் !

தவறுகள் செய்தவன் தலைநிமிர்ந்து நடக்கிறான்
தனக்கொரு கூட்டம் சேர்த்து .
எவரெவர் நல்லவர் என்பதை அறிகிலேன்
எங்கணும் காசுப் பேய்கள்
சுவரொட்டி மனிதர்கள் விளம்பரப் பிரியர்கள்
சொகுசாக வாழ்கின்றார்கள்
சிவசிவ என்கிறேன் சென்றதும் எவ்விடம் ?
சீக்கிரம் வருக வருக !

அரசியல் பிழைக்கிறான் அதிகாரம் வளைக்கிறான்
யாரிதைக் கேட்க முடியும் ?
உரசினால் முறைக்கிறான் உயிரையே எடுக்கிறான் !
உண்மையை அழிக்கின்றான்கள் .
வரிசையாய்த் தவறுகள் வாழ்க்கையே தவறிலே !
வளம்எலாம் கொள்ளைகொண்டார்.
இருசெவிகேட்குதா ? இறைவனே கேட்கிறேன் ?
இவர்களை என்ன செய்தாய் ?

வேரிலே வெந்நீரை ஊற்றிய பான்மையில்
வேதனை கொடுக்கிறான்கள்
ஊரிலே இவன்கள்தான் உயர்ந்தவன் போலவே
உலாவேறு செல்கிறான்கள் !
யாரிடம் கூறுவேன் ? யாரிடம் கூறுவேன் ?
யாரிடம் கூற முடியும் ?
மாறிய மனிதனின் வஞ்சகம் பார்த்தும்நீ
மௌனமாய் இருக்கலாமா ?

எழுதியவர் : (4-Apr-15, 12:17 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 69

மேலே