கறுப்பு

கருவறையும்
கண்மணியும்
இரவுகளும்
சாபங்களும்
கருப்பாய்த்தான்
இருக்கும்

எனில்,
மனசைக் கருக்க விடலாமா ..
அது ஒரு
வெள்ளை பூவல்லோ?

0

இரவின் கருப்பில்
நிலத்தின் வண்ணங்கள்
நிறமிழந்து போகின்றன
மனதின் கருப்பில்
உழுதிடும் எண்ணங்கள்
உரமிழந்து சாகின்றன

0
ஒரே ஒரு
கரும்புள்ளியால்
வெள்ளை ஆடை
வீணாகிவிடலாம்
வாழ்க்கையைப் போல ..

0

கல்லும்
கடவுளும்,
கறுப்பாக இருக்கலாம்
காலங்களும்
கவிதைகளும்
கறுத்துவிடக்கூடாது !

0

கறுப்பு மேகங்கள்
சூல் கொண்டால்
மழை நீர்
பெருக்கெடுக்கும்

இங்கு,

கறுப்புப் பணங்களே
சூல் கொண்டதால்
பொருளாதாரப் பச்சை
வெளுத்துவிட்டது ...! (1991)


("ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் " நூலிலிருந்து

எழுதியவர் : கவித்தாசபாபதி (4-Apr-15, 4:21 pm)
பார்வை : 180

மேலே