சுடர்

எனதெரி திரியின்
கருகாத பெருந்தவிப்புகளின்
பாகங்கள் ஒன்றிணைந்து
பிரி பிளந்தணையாத
சுடரின்
பிளம்பசைவினாலெனது
தலையணை தீப்பிடித்தெரிகிறது !

நெருப்பின்
நெடு நடனத் திகு திகுப்பின்
செங்குங்குமச் சிவப்பெடுத்து
வகிடு வழி சூடியது
நேற்றிவியர்வையோடு சிந்தும்
ஆரோகன அஞ்சனம் நீ !

என் தமனி படந்தொறும்
விரியும்
நின் ஜூவாலைத் தளிர்க் கொடிகளை
ஸ்பரிசக் கரங்கள் கவ்வி
உயிர் மின்சாரம் பாய்ந்தென்
உப நதி புணரும்
அரவப் பிணைதல்களால்
வெந்துதிர்ந்து சிந்த
மீளுமெனது கனல்
பஸ்மத்திலிருந்துன்னை
புடம்போட்டெழுப்பியுன்
பசலைச் சமிக்ஞைகளின்
பால் மடி சாயும் ...

எரிவின் அனல்கொதிப்பிலிருந்து
மீண்டு
உன் தசைத் தடாகத்தில்
மூழ்கியென்-
தணல் தணிந்து
இதோ
முதிரா இளம் கங்கையுன்
பிராவகப் பேராழத்தின்
மதுர வெளி உட்பிரகாரத்தில்
எனதுதிரம் கனிந்து
ஆழ்ந்தடங்கி
உவகையோடுருகி
நானில் கரைந்து
நீயாகிறேன் .

எழுதியவர் : பாலா (6-Apr-15, 8:42 pm)
சேர்த்தது : lambaadi
பார்வை : 89

மேலே