வியாசரின் பார்வையில் ராமன்
பாண்டவருக்கு பீஷ்மர் படுத்தபடி
பார் உய்ய வழிதன்னை பகர்ந்தபடி:
பால் வெளியில் தேவருடன் நின்றபடி
பார்வதி பரம சிவனார் பார்த்தபடி :
பரந்தாமன் திருநாமம் ஆயிரம்
பாடி பணிந்து தினமும் சிந்திக்க
அமுதம் போல் அனந்தன் பெயர்
அருளிக் கொண்டிருந்த நேரமது !
கலைவாணியும் பிரமனும் வருணனும் அருணனும்
கண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்
கந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று
கண்கொள்ளா காட்சிதனை காணலாயிற்றே !
கருமுகில் வண்ணனை மாதவன் கோவிந்தன்
கேசவன் ஸ்ரீதராவென பிதாமகர் பாடலாயிற்றே!
கண்ணனும் சத்யபாமா ருக்மணி சகிதம்
காவியமாய் பீஷ்மன் உரை கேட்கலாயிற்றே !
என்னத்தை சொன்னார் கங்கை மைந்தன்
எப்படி அறுப்பது சம்சார பந்தன்
எப்படி பெறுவது பிறப்பறு முக்தி -என
பக்தியுடன் கேட்ட பாண்டு மகனுக்கு
பாசமாய் நேசமாய் பதில் சொன்னார்
பிறப்பு பின்னர் இறப்பு பின் தாயின் கருவில்
மீண்டும் உயிர்ப்பு மீளா துக்கம் மேதினியில்
மீள வேண்டில் மேக வண்ணன் புகழ் பாடு
பாரில் நாராயணன் நாமம் நீக்கும் பந்தம்
பாடு நாளெல்லாம் தேடு அவனை நாடு !
இதமானது எது ஆதாரமெது இறைவன் யார்
அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்
தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்
நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
ஆயிரம் நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
தருமம் பொருள் வம்சம் செழிக்கும்
துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்
நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
பெருமாள் பேர்பாட அவன் புகழ் பாட
அருந்தெய்வ நாமம் அதை அடுக்கடுக்காய்
அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்
அநேகமூர்த்தி அநிருத்தன் அமலன் பேரோடு
அநேகரூபன் அஜாதன் அமரப்ரபு ஆதித்யன்
அச்சுதன் அச்சலா அனுகூலா அஜீதா என
அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்
அத்துடன் தாமோதரன் திரி விக்கிரமன்
மாதவன் கேசவன் இருடிகேசன் மதுசூதன்
கோவிந்தன் என சிலபல நாமம் செதுக்கி
செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்
மாயன் பேர் பாடவே மானுடம் உய்யவே
மண்ணு புகழ் மகாவிஷ்ணு அடி சேரவே
ஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்
ஜகத்ரக்ஷகன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
துக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்
தூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்
அருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்
அன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்
ஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்
அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி
அம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது
என்னதிது ! ஈஸ்வரா! எவ்விதம் சாத்தியம்
எந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்
ஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்
ஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்
இருந்தால் சொல்லவேண்டும் என்னிடம்
இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்
இறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை
எளிதான உபாயம் உண்டு ராம ராம என்று
நாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்
பலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்
***
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!