சொல்லிக்கொள்ளும் கொள்ளையர்கள்
உள்ளம் கொள்ளை அடித்த
இதயத் திருடன் எங்கே எனும்போது
உண்மையாய்
கொள்ளை அடிக்கப் போயிருக்கும்
அவனை அரச உத்தியோகம் என்றே
நாணத்தால் மூடி வைப்பாள் காதலி
எங்கம்மா உன் புருஷன்
எனும் கேள்விக்கான பதிலாய்
வேலைக்குப் போயிட்டாருங்க
என்றே எப்போதும்
கைவசம் வைத்திருக்கும்
பத்தினிகள் திருடனின் மனைவிகள்
போனவன் இன்னும்
திரும்பவில்லையே என்ற
பதைப்போடு காத்திருக்கும்
பெற்றோர் கர்வமும்
பெருமையும் கொள்வதுண்டு
தொழிலுக்குப் போயிருக்கும்
கடத்தல்கார பிள்ளைமேல்
உங்க அப்பா
என்னவாய் இருக்கிறார்
என்ற சக சகாவுக்கு
பள்ளிக்கூட மாணவனும்
தன தந்தை
ஊரார் சொத்தில் கைவைக்கும்
உண்மை அறியாமல்
வியாபாரம் என்றே
சொல்லி வைப்பான் பிள்ளை
அதுபோல நம்மால்
தெரிவு செய்யப்பட்டு
பாதுகாப்பளிக்கப்பட்ட
தேசிய கொள்ளையர்களை
நாமும்தான் சொல்லிக்கொள்கிறோம்
அவர் பாராளுமன்றம்
போயிருப்பதாய்....!
மெய்யன் நடராஜ்