யாருக்கு மே தினம்
கலகத் தொழில்புரிந்து கட்சி வளர்த்தே
உலகத் தொழிலாளர் கட்கு – மலரும்
தொழிலாளர் நாள்வாழ்த்துத் தூதனுப்பும் பொய்யின்
மொழிகேட்க வோமே தினம்?
அரசிய லென்னும் அசுத்த நிலத்தில்
பரஸ்பர போட்டி பகைமை – உரமிட்டு
மக்கள் மனதில் மணிவேரை ஊன்றுகின்ற
யுக்திக்கு மாமே தினம்?
உழைப்போர் திரட்டியே ஊர்மேய்ந்து நம்மால்
பிழைக்கின்ற பேர்வழிகள் பொய்யால் –இழைக்கும்
கொடுமை உழைப்பை கொடிகட்டக் கம்பம்
நடுவதோ நம்மே தினம்?
உழைப்பாளிக் கென்று உருவான நாளில்
உழைப்பாளி வாழ்வை உயர்த்த – மழையில்
நனையுமா டெண்ணியழும் ஓநாய்கள் கண்ணீர்
தனைக்காண வோமே தினம்?
நமது வியர்வையை நாடகம் போட்டுத்
தமது உயர்வை தரமாய் –அமைக்கும்
பயலுகள் வந்து பகடை உருட்டும்
செயலுக்கு மாமே தினம்?
உழைக்கின்ற தோழரை ஒன்றாகக் கூட்டும்
அழைப்பை அறைகூவல் என்றே –விழைத்து
உழைப்பின் மகிமை உலகிற் குணர்த்தித்
தழைப்பதற் கேமே தினம்.
இல்லாமை இல்லா இகமொன்று தோன்றுதற்கு
நில்லாமல் நின்றுழைக்கும் நெஞ்சுடையோர் –எல்லோர்க்கும்
அல்லலற்ற வாழ்வு அரவணைக்க வேண்டுகின்ற
நல்லநா லேமே தினம்.
*மெய்யன் நடராஜ்