சமுதாயம்

சமுதாயம்....
-=-=-=-=-=-=-=-

கடவுள் உறைவிடத்திற்கும்
பூட்டுக்கள் தேவைப்படுகிறது
கடவுள் சக்தியற்றவராய்....

காவலாய் இருக்கவேண்டிய
தந்தையே கற்பழிக்கிறான்
மனிதன் விலங்கினமாய்...

பழங்களையும் திருடுகிறார்கள்
சீருடையில் காவலர்கள்
இரண்டாமிடந்தான் திருடனுக்காம்...

ஓடுகிறது ஜீவனதிர்க்காய்
உழைப்பாளிகளின் கூட்டம்
முதலாளிகளோ ஜீரணத்திற்காய்... ...

உயர்ந்த செருப்புகளில்
பெண்களின் நடைகள்
இனவிருத்தி தடைகளாய்...

நடைபாதை வசிப்பிடங்களில்
ஓயாமல் குழந்தையழுகை
இனங்களை பெருக்கிக்கொண்டே...

கசக்க கந்தையில்லை
கண்களை கசக்குகிறான்
இருள் கண்களுக்குள்ளும்....

கலியுக பாஞ்சாலிகள்
கதற துகிலுரிக்கப்படுகிறார்கள்
கண்ணனை காணவில்லையாம்...

சோம்பேறியின் காசுகளில்
சொத்து சேர்க்கிறார்கள்
உடற்பயிற்சிக் கூடங்கள் அமைத்து...

பொத்தல் ஆடைகள்
ஏழைகளின் வறுமை
வசதியானவர்களின் நாகரிகமாய்...

ஆடைகளணிந்தும் அம்மணமாய்
மிருகத்தின் வெறியுடன்
மனிதத்தை துகிலுரித்து....

ஆடைகளின் அடையாளம்
காணாதவர்களாய் காடுகளில்
நிர்வாணமாய்... மனிதர்களாய்...

இன்னும் எப்படி எல்லாமோ
வளர்ந்து கொண்டிருக்கிறது சமுதாயம்
நாட்டில் உருப்படி இல்லாமலேயே.....
காட்டுவாசிகள் மட்டும் விதிவிலக்காய்...

எழுதியவர் : சொ.சாந்தி (2-May-15, 11:16 pm)
Tanglish : samuthaayam
பார்வை : 142

மேலே