இருக்கட்டும் தள்ளு – மீள்பதிவு
................................................................................................................................................................................................
தொகுப்புரை
பட்டணத்தில் வேலை பார்க்கும் மருமகளைப் பற்றி கிராமத்து சின்ன மாமியாரும், பெண்ணின் சித்தியும்.
மாமியார் குறை கூற, சளைக்காமல் சித்தி “ கோல்” அடிக்கிறார். ஒரு கட்டத்தில் சித்திக்கு கோபம் வருகிறது - அந்த கோபத்தை அந்தம்மா மேல் காட்ட முடியாது; ஆகையால் தேமே என்று எங்கோ இருக்கும் ஒருவரைத் திட்டி தன் கோபத்தைத் தணித்து கொள்கிறார்.
சிக்னல் சின்ன மாமியாருக்குப் புரிந்து கப்சிப்...!
................................................................................................................................................................................................
சின்ன மாமியார் :
‘‘அம்மாம் பெரிய வீடான்னு அசந்து போனேன்டி
அம்புட்டும் நமக்கில்லே’ன்னு அப்புறம் சொன்னான்டி;
அஞ்சாவது மாடியேறி அலுத்துப் போனேன்டி,
கொஞ்சூண்டு வாசல் வச்ச குட்டி வீடுடி!’’
பெண்ணின் சித்தி :
‘‘ரெண்டு பேரு வாழ எதுக்கு நாயக்கர் ஹாலு?
சென்னைமா நகருன் னாலே பேரு பெத்த பேரு! ’’
சின்ன மாமியார் :
‘‘மீசையத்த சின்னப் பையன் மேலதி காரியாம்;
ஆஸ்தி பாஸ்தி அனுபவஸ்தர் ஆபிஸ் பையனாம்;
ஆன் டூட்டி, ஆஃப் டூட்டி அசத்திப் போடுறா;
அஷ்டமி நவமி நாள் கிழமை நகத்தைக் கடிக்குறா;
பொறந்த நாளு கொண்டாட்டம் வாழ்த்து சொல்லுறா;
எரியறத அணைக்கிறாளே, என்னா சகுனமோ?
பெண்ணின் சித்தி :
‘‘சகுனம் பார்த்து செஞ்ச தெல்லாம் சாஞ்சி போச்சுதே;
சகட்டுமேனி செய்யறாவ, செய்யட்டும் தள்ளு. ’’
சின்ன மாமியார் :
‘‘பட்டனை தட்டி சமைக்கிறா, துணியும் துவைக்கிறா;
பட்டனை தட்டி ஓடுறாளே, எந்த ஊருக்கு?
‘‘சாக்லெட்டும் பிஸ்கட்டும் சாப்பா டுங்கறா;
சாதம் வெறுத்த பொம்பளை ஏன் சம்பா திக்குறா? ’’
பெண்ணின் சித்தி :
‘‘ கோயில் யானை போலிருந்தா குடும்பம் தாங்குமா?
வாயைக் கட்டி பார்த்துக்கறா, வாழட்டும் தள்ளு! ’’
சின்ன மாமியார் :
‘‘ நேர்ல நின்னு பேசப் போனா நேர மில்லை யாம்;
ஃபோன்ல பேசி மெயிலைப் போட்டா பொட்டுன்னு கேக்குறா;
தாலிக்கயிறு தெரிஞ்சாக்கா தள்ளி விட்டுக்கறா;
கார்டை மட்டும் நாய் மாதிரி கழுத்தில் மாட்டிக்கறா!
புருசன்காரன் பேரைச் சொல்றா; நாம சொல்வமா?- ’’
பெண்ணின் சித்தி : - ‘‘அந்த
எருமை பேரை எவ சொல்லுவா? இருக்கட்டும் தள்ளு. ’’
................................................................................................................................................................................................
அருஞ்சொற் பொருள்.
பட்டனை தட்டி ஓடுறாளே- ட்ரெட் மில்.(treadmill )
................................................................................................................................................................................................