வில்லன்கள்

அவள்
ரெண்டைப் பெற்றெடுத்தாள்
சொத்து கிடைக்காதென
சொந்தம் அறுத்தாள் மகள்

மகனோ
நெறியற்ற வாழ்வில்
நித்தம் தொலைந்து
பாதை மாறிப் பயணமானான்

பக்கத்தில் இருந்தவர்கள்
பாவப்பட்டார்கள்
அக்கரையால் அல்ல
மற்றவர் துன்பத்தில்
இன்பம் தேடும் இயல்பால்

திரண்ட சொத்து இருந்தும்
வயோதிகத்திற்குள் வாடிப்போனாள்
அன்றாட உணவு கிடைப்பதே
ஆஸ்கார் அவார்ட் போலானது

இறுக்கம் தாங்காமல் ஒரு நாள்
இதயம் நின்று போனது

கதறியபடி வந்தாள் மகள்
கண்ணீர் மல்க நின்றான் மகன்
சுற்றி நின்றவர்கள்
வளமான அவள் வாழ்வுப் பற்றி
உவமை அணிகளுடன்
உரக்கப் பேசினார்கள்

இருந்தபோது
எதுவும் செய்யாதவர்கள்
ஊர் மெச்சப் பந்தியிட்டு
நீத்தார் கடன் முடித்து
நீரில் மூழ்கினார்கள்

உலகம் ஒரு நாடக மேடை
இங்கு கதாநாயகர்கள் எவருமில்லை
வில்லன்கள் மட்டுமே
வித்தியாசமாய் திரிகிறார்கள்

எழுதியவர் : கொ.வை. அரங்க நாதன் (7-May-15, 4:25 am)
சேர்த்தது : கொவைஅரங்கநாதன்
Tanglish : villankal
பார்வை : 209

மேலே