மரண சான்றிதழ்
மரணம் பயம் கொண்டு வரும்
பயந்தாலும் மரணம் வரும்.
எந்த உயிரும்
மரணத்தின் வரவேற்பறையில்
இருப்பதில்லை -
எவர் ஒப்புதலையும்
முன் மொழிதலையும்
வழி மொழிதலையும்
ஏற்புரையையும்
அது கோருவதில்லை.
விபத்தும் தற்கொலையும்
எஜமானர்களாகும்போது
மரணம்
பேசுபொருளாகிறது
மரணத்தை சந்திப்பதும்
சிந்திப்பதும் வேறு
மரணத்தைக் குறித்த கவிதைகள்
தத்துவமாய் நகர்கிறது
உணர்ந்து பார்த்தால்
மரணம் ஒரு வரம்
இடு காடும் சுடு காடும்
மரணதிற்குதான்
ஒரு மரண வேளையில்
முந்தைய மரணங்கள்
நினைவுக்கு வருகின்றன
ஒரு விபத்தின்போது பேசப்படும்
மற்றொரு விபத்தைப்போல
ஒவ்வொரு மரணமும்
துக்கத்தையும் தாக்கத்தையும்
ஏற்படுத்துகிறது
மரணங்கள்
பெருந்தன்மையுடன்
மன்னிக்கவே செய்கிறது
இவைகள் வம்பு வழக்குகளை
முடித்துக் கொள்வதில்லை
வங்கிகளைப் போல.
சில மரணங்கள்
அவஸ்தையை
வழியனுப்பி வைக்கிறது.
நோயாளி மரிக்காமல்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
கடை திரும்புவதில்லையாம்.
மரணம் சுவாரசியமானது
இது இருப்பவரை வாழச் சொல்லும்
சமயங்களில்
இருப்பவர்கள்
வாழ்க்கையைத் தொடர
இறப்பவர்களின் மரண சான்றிதழ்
அத்தியாவசியமாகிறது
மரண சான்றிதழ்
மாநகராட்சி அலுவலகத்தில்
கையெழுத்திட தயாரானது
எதிரே நின்ற என்னிடம்
மறைந்த மனிதரின்
பிறப்பு சான்றிதழ் நகல் கோரினார்
கள்ளிப் பாலிலும்
கருகலைப்பிலும் இறந்தவருக்கா
சான்றிதழ் கோருகிறோம்
எரிச்சல் எடுத்தது
பிறக்காத மனிதருக்கு
மரித்தான் என்று
சான்றிதழ் எப்படி இயலும்
கேட்டார் அவர்.
பிறந்த தேதி தெரியாத
அவரின் மரணத்திற்கு
சாட்சி தேடி
மரணமும் மரிக்கிறது
*********************************
ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்,