படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கவிதைத் தலைப்பு தெருப்பாடகி

தெருப்பாடகி நான்.
தெருப்புழுதி என் மேலாடை..
சங்கீத ஊற்றுக்கு சாலைதான் நீரோடை..
மரத்துக்கு மேல் தோன்றும் நட்சத்திரம்
அதுதான் என் சொந்தக்காரி...!
பேசிக்கொண்டே இருப்பாள்....
மொண மொண...... மொண மொண......
இங்குதான்
சுள்ளி கொளுத்தி நடனமாடுவோம்...!
முதலில் மயங்கி விழுபவர்க்குத்தான்
இரவு உணவு..
ஒவ்வொரு முறையும் நானே தின்கிறேன்..
இன்றாவது... மயங்காமல் ஆட வேண்டும்..
நான்கடுக்கு மாளிகையில் வாசம்- முன்பு..!
குடும்பத்தாருக்குப் பணியாளாக....
சமை என்றார்; சமைத்தேன்;
துவை என்றார்; துவைத்தேன்;
படு என்றார்; மறுத்தேன்
போ என்றார்; விடுத்தேன்..
அன்றுதான் நேபாள பூகம்பம் !
கட்டிய வீடு கல்லறையாக.. ....... .....
பிழைக்கத்தான் விரட்டினார்களோ ????
மற்றபடிக்கு குறையில்லை;
நீங்களே பார்க்கிறீர்களே??