மகனுக்காக

"இந்த பய புள்ள எங்க போனான்னு தெரியலியே .... காலையிலேருந்து தேடுறேன்.. டேய் சக்தி... ஏன் ஆத்தா என் பையன பாத்தியளா..."

"இல்லையே... பள்ளிக்கூடம் லீவு வுட்டாகல்ல இந்த ஒரு மாசமும் இனிமே ஒனக்கு அவன தேடுறதுதாண்டி பொழப்பு..." என்று பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிக்கொண்டே போக...

"ஆமாத்தா...", என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த கவிதாவிடம் வந்தார்.. சக்தி என்கிற சக்திவேலுவின் அம்மா...

"ஏய்..கவிதா..."

"என்னத்த கூப்டியா...?", என்று அவள் கேட்க...

"எங்கடி ஒன் கூட்டாளி? காலையிலேருந்து தேடுறேன்.. காணமே.. உன்கிட்ட சொல்லாம எங்கயும் போகமாட்டானே..."

"அது வந்துத்தே... அவன் கூட்டாளிகலோட சேர்ந்து..வீராணம் ஏரிக்கு போறதா சொல்லிக்கிட்டு இருந்தான் ..."

"என்னடி சொல்ற..."

"சும்மாதான் போய்ட்டு வர்றதா சொன்னான் ...போனாதான் போவான்.. நீ ஒன்னும் பயப்ப‌டாத வந்துடுவான்..."

"வரட்டும் இன்னக்கி அவன்... அவங்கப்பா போகும்போதே நானும் போயிருக்கணும் ... கருவேப்பிலை கொத்துபோல ஒத்த புள்ளய வச்சிருக்கோமே... புள்ளய ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு
நெனச்சா...."

'பொழுதுசாயும் நேரமும் ஆச்சேன்'னு வாசலுக்கும் ரோட்டுக்குமா அம்மா நடந்து கொண்டிருப்பதை தூரத்துலேருந்தே சத்தி பார்த்துவிட..

..கிட்ட வர வர அம்மாவின் கோபமுகம் தெரிய.. கையில பெரிய‌ விறகுக்கட்டை வைத்திருந்தார்...

..சக்திக்கு தெரியும் அம்மா அடிக்கமாட்டார் என்று.. இருந்தாலும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அருகில் வந்தான்...

...கையில் ஒரு பை இருந்தது..

"எங்கடா போன...? காலையில முடக்கத்தான் தோசை வேணும்ன்னு சொன்னியேன்னு ஆட்டுக்கல்லுல மாவாட்டி தோசை சுட்டு வச்சிக்கிட்டு தேடுனா எங்க போனிங்க துரை... ஏரிக்கா...?"

"அச்சச்சோ..இல்லம்மா..."

"பொய் சொல்லாதடா... எல்லாத்தையையும் ஒன் கூட்டாளிபுள்ள சொல்லிட்டா..."

"ஓ..அவ வேலையா இது..அவள..."

"டேய்..டேய்.. நில்லுடா....எனக்கு பதில சொல்லு....!"

"ம்... வந்தும்மா...", கையில இருந்த பொட்டலத்தை அம்மாவிடம் கொடுத்தான் சக்தி.

"என்னடா..இது...?"

அதில் சில வளையல்களும் பொட்டும் பூவும் இருந்தது...

"என்னடா இது..? யார்...குடுத்தா...?"

"நாந்தான்ம்மா வாங்கினேன்..."

"நீயா...!! எதுக்கு...? உனக்கு ஏது காசு....?"

"அம்மா... கூட்டாளிங்க கூட விளையாடும்போது சொன்னாங்க‌ இன்னைக்கி அன்னையர் தினம்... நம்ம அம்மாவுக்கு ஏதாவது வாங்கிகொடுக்கணும்டான்னு சொன்னாங்க... உன்ன நான் பொறந்ததுலேருந்து பார்க்குறேம்மா .... தலை பின்னி போடாம, கொண்டதான் போட்டு இருக்க.. பூ வச்சது
இல்ல.. பொட்டு வச்சது இல்ல... கேட்டா.. அதெல்லாம் வைக்க கூடாதுன்னு சொல்ற ...ஏம்மா...? எனக்காக வையேம்மா...", என்று மகன் சொன்னபோது... என்ன செய்வது என்று தெரியாமல்...

"டேய்.. இதுக்கெல்லாம்..உனக்கு ஏது காசு?", என்று கத்தினாள்..

"அம்மா....அது வந்தும்மா... நம்ம ராசாத்தி அக்கா தோட்டத்து மாமரத்துல ஏறி இன்னைக்கி மாங்காயையெல்லாம்...பறிச்சி தரச்சொன்னாங்க.. நானும் என் கூட்டாளிகளும் சேர்ந்து செஞ்சோம்மா... அதுக்கு குடுத்த காசுலதான் இதெல்லாம் வாங்குனேன்...." என்று சொன்ன மகனை பாசத்துடன் பார்த்தபடி, கொண்டையை அவிழ்த்து சடை போட்டு... நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டார்... சக்தியின் அம்மா....
பூவை தன் கணவனின் படத்துக்கு போட்டுவிட்டு மகனைப் பார்த்தார். மகனின் முகத்தில் அத்தனை ஆனந்தம்...

"ஐ...கவிதா எங்கம்மாவ வந்து பாரேன்", என்று சக்தி கவிதாவை அழைத்தபடியே ஓடினான்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-May-15, 7:13 am)
Tanglish : maganukaaga
பார்வை : 375

மேலே