தேடல் -ரகு

தனித்துவ மிகு
துணிச்சலை மீண்டும் ஒருமுறை
முன்னிறுத்தி
நெரிசல் மிகுந்த தார்சாலையில்
கம்பீர நடை நடந்ததது
ஒரு கரிய நிறக் காளை...!

கனத்த வாகன ஒலியிலோ
முட்டி முன்னேறும் வண்டியிலோ
கவனம் சிதறவுமில்லை
அடித்துப் பத்த ஆட்களுமில்லை

பெருத்த அதன்
வயிறு தடவிக் குதூகலித்து
வண்டியிற் கடந்தனக்
குழந்தைகள்......!

முச்சந்திக்கு முச்சந்தி
உணவுக்கூடங்கள்
வண்டிக் கடை விரையப்படுத்தும்
காய்கறி,பழங்கள்
வீட்டுக்கு வீடு
நேந்துவிட்ட உபசரிப்புகள்
வளர்த்தி விட்டிருந்தன ஒரு
ஆஜானுபாகுவானத் தோற்றத்தை..!

கூட்டம் கடந்ததொரு
மண் சாலைக்குத் திரும்பிய காளை
கண்கள் விரிய
மூக்குப் புடைத்து
பெருத்த மூச்சுகாற்றோடு
தோள் சிலுப்பக்கண்டு

மிரண்டோடின
எதிர்பட்ட வண்டி மாடுகள் !

கடின உழைப்பு ,
அடிவாங்கிய தழும்புகள்
வறண்ட புல்லுக்கட்டில்
சினிமா சுவரொட்டியில்
மறந்த அசைபோடல்

இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கிறது
உழைப்பு தன் உயர்வை.........!

எழுதியவர் : சுஜய் ரகு (12-May-15, 9:00 am)
பார்வை : 123

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே