பயமென்றால்

வெகு நாட்களாகவே
பயமென்பதை
உற்று உற்றுப் பார்க்கிறேன்
அதனில்
எந்த அசைவுமில்லை...

பலமுறை
களவு செய்வதற்கு
அண்டைத் தோட்டமாகிய
என்னுள்
காவலை மீறி அடிபட்டதுண்டு...

மென்மேலும்
முறைத்துக் கொள்ளும்
எதிரியாகவே
பழைய பகையொன்றினையாவது
தேடுகின்றது...

ஒரு சிலமுறை
கண்ணாமூச்சி ஆட்டமாடி
தொட்டுப் பார்க்கிறது
மீண்டும்
கண்ணைக் கட்டிக்கொள்ள....

கழுத்தருகுக்
கத்தி நுனியில்
வழிந்திடாத இரத்தத்தினைச்
சுவைத்ததாய்க் குற்றவாளியாவது...

இடி விழும் வானத்தில்
அதனிடம்
சிக்கிக் கொள்வேன்..

மின்னல் ஓடும்
தூரத்தில்
கதவடைத்துக் காப்பாற்றுவேன்...

விரக்தியில்
கற்பனைகளின் போராட்டத்தில்
கால்மிதிபடும் கொடியாவதுண்டு....

வேறு வழியின்றி
இறுதியில்
அது பயமென்பதின்
மொழியினைக் கற்றுணர
நேர்மையிடம்
மண்டியிடுகின்றது....

எழுதியவர் : புலமி (12-May-15, 11:45 am)
பார்வை : 104

மேலே