மே 18

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

மரணஓலம் காதுகிழிக்க
மனிதசடலம் சிதறிகிடக்க
சதைகளின் சகதிகளில்
சர்வாதிகாரப்பேய்கள்
பிணம்தின்று பெருமைகொண்டநாள்

தன்னை இழந்த தமிழினம்
வரலாறாகிப்போனநாள்

வழியும்கண்ணீரோடு
முள்ளிவாய்க்கால் முடிவல்லத்
தொடக்கம் தொடக்கமென்றே
நீதிக்கதவுகளின் நெஞ்சத்தைத்தட்ட
தமிழர்தம் கரத்தை உயர்த்தியநாள்

உலகம் அறியாமல்
உறங்கிக்கிடந்த இனம்
விழித் திறன்தெழுந்து
விரிகின்ற திசையெங்கும்
நீதிகேட்டு நிமிர்ந்தநாள்

இலட்சக்கணக்கான ஆத்மாக்களை
நினைத்துப்பார்க்க மட்டுமல்ல
நீதியைமீட்காமல் நித்திரை இல்லையென
ஒவ்வொருத் தமிழனும்
உறுதியேற்கும் நாளே இந்நாள்.


-----------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (18-May-15, 2:08 pm)
பார்வை : 2728

மேலே