இழந்த அதிகாரம்
ஊர் எல்லையில்
உள்ள ஆலமரம் ..
காலை முதல் அங்கே தவம்..
தினம் ..தினம்..
கண்ணப்ப மேஸ்திரிக்கு !
இருந்தது கால்காணி நிலம்
அதுவும் இப்போது வங்கியில் அடமானம்..
அடைபட வேண்டிய கடனோ ஏராளம்
பிள்ளையின் படிப்புதான் காரணம் !
படித்து முடித்து விட்டான்..பையன்
பணியிலும் சேர்ந்து விட்டான் அவன்..
வடக்கே மனைவியுடன் வாழ்கின்றான்..
தெற்கே கண்ணப்பரும் தேய்கின்றார்!
தபால்காரர் வரவு தூரத்தில் தெரியும்..
தனக்கொன்றும் வரவில்லை என்பதும்..
தயக்கமுடன் அவர் தலை குனியும்
தவிக்கின்ற மனமோ ஓசையின்றி புலம்பும்!
ஆண்டுக்கு ஓர் முறை ஆரவாரம்
அய்யாவின் வீட்டுக்கு மகன் வரும்தோறும்
போகுமுன் கொடுக்கின்ற பணம் உபகாரம்
அவர் இழந்தது என்னென்ன அதிகாரம்?