படைத்தான் உனை
காலத்தின் கடிகாரங்கள் கண்டுபிடித்து
நேரத்தின் முட்கள் பின்தள்ளி
காவியக் காலங்கள் சென்று
காண்டீப வில் கடன்வாங்கி
உன்காந்த கண்கள் வரைந்திருப்பான்
அடர்ந்த காடுகள் உள்புகுந்து
அத்துனை மலர்கள் ஆராய்ந்து
அந்தி வேளை அகலும்வரை
அயராது வாசம்தரும் பூக்கள்பறித்து
உன்மென் முகம் வடித்திருப்பான்
பரந்த வானங்கள் மேல்சென்று
வெண் மேகங்கள் புறந்தள்ளி
கார் முகில்கள் தேடி
குயில் சிறகுகள் சேகரித்து
உங்கருங் குழல் தொடித்திரிப்பான்
வளங்கள் எல்லாம் வடிந்துபோனாலும்
வருந்தாமல் விண்மீன்கள் விலைக்குவாங்கி
செவ்விதழில் பதுக்கி வைத்து
புன்னகையின் பொழுதெல்லாம் சிதறவைத்தான்
படைத்தபின் பெருமூச்சு விட்டு
படித்த முறையெல்லாம் பயன்படுத்தியதைஎண்ணி
பரம்பொருள் இளைபார சென்றான்
எஞ்சிய வித்தைகள் காப்பாற்ற !

