மழையில் காதலி

உலகை மறந்தேன்
உன்னில் கலந்தேன்
மலரே உன்னால்
மனதைத் தொலைத்தேன்

பாதம் செல்லும்
பாதை மாற்றினாய்
நேசம் கொண்டு
என்னைத் தாக்கினாய்

கனியே ! என் கனவிலும் நீ தான்
எனினும் ஏன் தவித்திட வைத்தாய் ?
தனியாய் நான் சாலையில் சென்றால்
பனியாய் என்னை உருகிடச் செய்தாய் !

மழையில் நீ ஆடிடும் போது
மனதோரம் அடிக்குது காற்று
விழியால் நீ பேசிடும் போது
விழுந்தேன் உன் அழகினைப் பார்த்து

உன் இதழில் தவழும் புன்னகை
ஏன் சிலையாக்குதடி என்னை ?
நீ மட்டும் தெரிகிறாய் அது ஏனோ?
என் உயிரின் மூச்சு நீ தானோ ?

மழையில் ஆடும் மயிலே
முழுமதியின் எழிலே
முத்தான உன் கன்னத்தில்
முத்தமிடும் மழைத் துளியே !

தேவதையே !
நீ விண்ணை விட்டு வந்தது
என்னோடு வாழத்தானடி !
நான் மண்ணை விட்டுப் போனாலும்
என் காதல் மறைந்திடாதடி !

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (21-May-15, 10:09 pm)
Tanglish : mazhaiyil kathali
பார்வை : 372

மேலே