நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னைப் பற்றி எழுதுவதற்கு
நான் என்றைக்கும்
வார்த்தைகளை தேடியதே இல்லை
கண்மூடி அமர்ந்து
"உனக்காக" என்று
எழுத தொடங்கும் போதே
கவிதை ஆரம்பமாகி
முடிந்தும் விடுகிறது
ஒரு மெல்லிசை நம்மை
கண்மூட வைத்து அதனோடே
கூட்டிச் செல்வது போல்
உன்னைப் பற்றிய நினைவுகள்
கை நிறைய வசந்த காலத்துடன்
எப்போது போனாலும் எனை
அள்ளித் தழுவுகின்றன
சொல்லப் போனால்
நிஜத்தை விட
கற்பனை கனவாயினும்
கலைத்துவமாகவே தோன்றுகிறது
நாள் பொழுதும்
உனையே பேசுவது
எனைப் பொருத்தமட்டில்
சர்க்கரை பாகில்
தேன்துளி கலப்பது போல்
மிகவும்
தித்திப்பாகவே உள்ளது
மின்சாரம் அறியா கிராமத்திற்கு
ஒரு மின் விளக்கு ஏற்படுத்தும்
பேரின்பம் போல்
உன் வருகை எப்போதும்
என்னை பிரம்மிப்படையவே வைக்கும்
மூதாட்டித் தலையில்
விறகுக் கட்டுபோல்
உன் பிரிவு என்னை
அமுக்கத்தான் செய்கிறது
இருந்தும் எடை நிரம்பிய
தொடர்வண்டி போல
ஏதோ ஒரு விசை வாழ்வை
நகர்த்திக் கொண்டுதான் போகிறது
சட்டென்று மாறும் வானிலை போல்
ஒரு மாற்றத்தை
மனம் விரும்பியதே இல்லை
ஒரு நிமிடத்திற்கு மேல்
கண்ணீர் சிந்துவதே
நாடகமாகிப் போன காலத்தில்
ஏழு வருடக் காதலை எண்ணி
ஏங்கிக் கிடப்பதையே மனம்
பெரிதும் வேண்டுகிறது
மெட்டுக்குள் அடங்காத வரிகளும்
திரைக்கதையை விட்டு
விலகி நிற்கும் கதாபாத்திரமும்
ஆஸ்கார் விருது பெறுவது போல
என் வாழ்வை விட்டு பிரிந்த
நீயும் உன் காதலும்
என் வாழ்வின் முக்கிய
அங்கமாகவே திகழ்வது
பெருமகிழ்ச்சி தான்