முடிகின்ற அத்தியாயங்கள்
இறுதிச் சடங்கில்
கொளுத்தப்பட்ட
கற்பூரமும் பசக்கென
பற்றிக் கொள்கிறது..
கடைசி முறையென
பார்க்கும் கணங்கள்
அப்படியே உறைவதில்லை..
புகைப்படத்தின் முன்
சாம்பலான ஊதுபத்தியை
விரட்டாமல் இருப்பதில்லை
வீட்டுத் துடைப்பம்...
உடைந்தப் பானையால்
கிடைத்த பணத்தில்
அரிசியிடப்பட்டிருக்கும்
ஒருவனின் பானையில்..
ஈரவிழிகளால் காய்ந்த
சலனமற்ற புன்னகையோடு
சொல்லப்படும் தேநீர் அருந்துங்களால்
கீறிச்சிட்ட சக்கரத்தில்
எண்ணெய் சொட்டு விழுகிறது.
--கனா காண்பவன்