அம்மா அம்மா ~~ சந்தோஷ்

அம்மா! அம்மா !
---------------------
அம்மா !
நீரில்லாமல் நிலமா?
அம்மா !
நீயில்லாமல் நானா?
அம்மா!
எனை கருக்கொண்டாய்.
எனையுன் குருதியினால்
உயிர் கவிதை செய்தாய்.
எனையுன் பன்னீர்குடத்தினில்
நோவாமல் மிதக்கவைத்து
நேயமாய் வலிப்பொறுத்தாய்.
அம்மா !
இதுவரையிலும்
உன்னிடம் கேளாத
சில கேள்விகள்
கேட்கட்டுமா அம்மா ?
கருக்குடத்தில்
என் பிஞ்சு விரல்கள்
உன் கருவறைச் சுவற்றினில்
என்ன ஓவியம் அம்மா
வரைந்தது ?
மூன்றாம் மாதத்தில்
என்னிருதயம் துடித்தப்போது
என்ன என்னம்மா
நீ நினைத்தாய் ?
ஐந்தாம் மாதத்தில்
என் இதழ்கள் அசைந்தப்போது
எந்த மொழியம்மா
நீ கேட்டாய் ?
எட்டாம் மாதத்தில்
ஏதோ ஒரு இசையில்
நான் தலையாட்டியது
இசைஞானியின்
இசைக்கேட்டா?
பத்தாம் மாதத்தில்
என் பட்டுப்பாதங்கள்
எட்டியுதைத்திடும் போது
என்னச்சொல்லியம்மா
நீ செல்லக்கோபமிட்டாய் ?
பக்குவமாய்
தொப்புள்கொடி பந்தமாய்
உன்னோடே
உன் கருவறையில்
வைத்திருந்தாயே அம்மா?
ஏனம்மா
நான் என்னம்மா
பிழைச்செய்தேன்?
கருவறை வாசத்தில்
கவலையின்றி நானிருந்தேனே
ஏனம்மா
நான் என்னம்மா
பிழைச்செய்தேன்?
ஏனம்மா
உன்னிலிருந்து
என்னை பிரித்தாள்
அந்த செவிலித்தாய் ?
கதறித்துடித்து
யுத்தமொன்று நடத்தி
குருதி சிதறித்தெளித்து.
உன்னையே உன்னை
மரணிக்கவைத்து
என்னோடு நீயும்
பிரசவமான அந்த நொடியில்
நான் அழுதேன் என்பதாலா
நீயும் அழுதாய் அம்மா ?
உன் இரத்தத்தையே
தாய்ப்பாலென்று சமைத்து
நீ தந்தாயே அம்மா!
எனக்கும்
அந்த வெண்ணிலாவுக்கும்
நெய்யூற்றிய சோற்று
உருண்டைக்காட்டி
அன்பூட்டி
அன்னம் தந்தாயே அம்மா !
அம்மா !
இந்த ஊணும் உயிரும்
நீ தந்ததுதானே அம்மா.
எத்தனை தவணையிலம்மா
நீயென்னை பெற்றக்கடனை
நான் தீர்க்கமுடியும் ?
---
-இரா.சந்தோஷ் குமார்
-----------------------------
நன்றி
ஒவியம் : Dhanushka Liyanage / Srilanka