நல்வழி கண்டிடுவோம்

மதிக்கும் தொழிலால் ​மிதித்துப் பிழைக்கிறேன் ​
​மண்ணில் வாழ்ந்திட வீதிகளில் சுற்றுகிறேன் !
கையூட்டுக் கேளாமல் மையிருட்டு ஆனாலும்
உழைக்கும் எங்களை ஏளனமாய் பார்ப்பதேன் !

வாழ்ந்து கெட்டவரும் வறுமையில் பிறந்தவரும்
வாழ்ந்திட வையகத்தில் வழியேதும் இல்லையா !
பார்வையில் தெரியுது பாட்டாளியின் கேள்வியும்
பார்க்கும் நெஞ்சங்களே பதிலும் சொல்லிடுங்கள் !

வழிந்திடும் சோகத்தால் நம்விழிகள் நனைகிறது
வருந்திடும் நிலைதானா வாழ்க்கை முழுவதும் !
உழைத்து உண்பவர்க்கோ உகந்திட்ட உலகமல்ல
சுரண்டிப் பிழைப்பவரோ சுகத்திலே மிதக்கிறார் !

அடுத்தவர் நலனைதான் நினைப்பவர் எவரிங்கே
அடிக்கும் கொள்ளையில் போட்டியும் நடக்குதே !
ஏமாற்றி வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏறுகிறதே
ஏன்தான் பிறந்தோமென மனங்கள் கதறுகிறதே !

வறுமையை ஒழித்திட வரிசையாய் நிற்போம்
வன்முறை தவிர்த்து வல்லமை காட்டிடுவோம் !
இல்லாமை இல்லா நிலைதனை உருவாகிடவே
இதயத்தால் இணைந்து நல்வழி கண்டிடுவோம் !


பழனி குமார்

( கடந்த மே மாதம் , இலங்கையில் உள்ள " தடாகம் கலை இலக்கிய வட்டம் " சார்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மேற்கண்ட கவிதையினை பதிவு செய்தேன் . இதனை சிறப்பு கவிதையென தெரிவு செய்யப்பட்டு " கலையூற்று " எனும் பட்டமும் , சான்றிதழும் வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளனர் . அக்கவிதையை இங்கு பதிவு செய்துள்ளேன் தங்களின் பார்வைக்கு . அனைத்தும் உங்கள் வாழ்த்துக்களுடனும் , ஆசியுடனும் . நன்றி )

என்றும் நட்புடன்
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Jun-15, 6:59 am)
பார்வை : 89

மேலே