எல்லாம் அவள் செயல்
காற்றில்லை
கலைந்து செல்கிறது
மழை மேகம்
அவள் குடை பிடித்துச் சென்றதால்...
கதிரவனும் கண்ணாம்மூச்சி ஆடுகிறான்
மேகங்களில் ஒளிந்து
சாலையில் செல்லும்
சோலையவளுக்கு வியர்க்குமாம்...
ஒரு முறையேனும் தூக்கிவிடு
கன்னம் கிள்ளி கொஞ்சிவிடு
கைநீட்டி அழும் குழந்தைகள்...
அவளைப் பார்த்தால்
தேவதைகளும் சண்டையிடும் கடவுளிடம்
தங்களையும் அவள் போல்
சிறகில்லா தேவதையாக படைக்கவில்லையென்று..
மல்லிகை முல்லை மட்டுமல்ல
வாடா மலரும் வாடுகிறது
அவள் சூடவில்லையாம்...
கடல் உள்வாங்கியது
கரைகளில் அவள் கால்தடம்...
"பூக்களை பறிக்காதீர்கள்"
யார் வைத்தது
இந்த அறிவிப்பு பலகையை
திட்டியது பூக்கள்
அவள் பறிக்காமல் சென்றதால்...