கவிஞனாகிய நான்
கவிஞனாகிய நான்...
காகித நாடுகளையெல்லாம்
என் கவிதை வாரிசுககளே ஆளவேண்டுமென
ஆட்கொள்ளா ஆசைக்கொண்ட
அச்சமில்லா அரசன்
காகித கழனியெல்லாம்
கற்பனையால் ஏர்ப்பிடித்து
கவிதைப் பூ பறிக்கும்
பூகோள விவசாயி
காகித நிலவுகளில்
கவிதையால் காலடி வைக்கும்
அகிலமே அழிந்தாலும்
அழியாத ஆம்ஸ்ட்ராங்
காகித பூமிகளில்
விழியீர்ப்பு விசையறியும்
இறந்த காலம் இல்லாத
நிகழ்கால நியூட்டன்
காகித மலைகளையெலாம்
எழுத்தெனும் உளிக் கொண்டு
கவியால் சிலைவடிக்கும்
சிந்தனைச் சிற்பி
காகித இதழ்களோடு
எழுத்தின் இதழ் சேர்த்து
கவிதையெனும் முத்தமிடும்
காதல் மன்மதன்
காகித வீரர்களோடு
எழுத்தால் போரிட்டு
கவிதைக் கொடி நாட்டும்
பேனா வீரன்
கவிஞனாகிய நான்
காகித காடுகளில்
சிந்தையெனும் சிறகு விரித்து
கவிதையெனும் இரைத்தேடும்
"கவிப் பறவை"