போய் விடு
................................................................................................................................................................................................
சமீபத்தில் கண்டாய்; உதவினேன், உதவினாய்.
குடும்பத்தைச் சொன்னாய்.
மனைவி என்றாய், குழந்தை என்றாய்
அவர்கள் வாய்த்தது வரமென்றாய்.
நான் தனித்தியங்கும் கன்னி என்றேன்.
தடுமாறுவது ஏன்?
வரத்தை சாபம் என்கிறாய்;
தனித்தால் துயரம் என்கிறாய்;
என் பணியில் தலையிடு கிறாய்,
எதிர்த்தால் மனமுடை கிறாய்;
முல்லை-பாரி கதை சொல்கிறாய்!
தரங்கெட்டவள் உன் தோழி என்றா நினைத்தாய்?
ஆலம் விழுது காற்றிலாடினால்
ஆதரவற்ற கொடியாகிடுமா?
விழுதுக்கு வேந்தன் எதற்கு?
எண்ணங்களைப் பகிரலாம்,
ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருப்பவனிடம்
வாழ்க்கையைப் பகிரலாமா?
எத்தனை ஆசை வரங்கள்!
பலியாடு கழுத்தில்
எத்தனை வாச மலர்கள்!
மோகத்தால் மோசம் போகப் போவது நான்தானே.
உலகத்தில் இல்லாததா என்கிறாய்;
மணமாகாத ஆண்களும் மண்ணில் உண்டே
உன் மனைவி போனால் ஏற்பாயா?
நண்பனின் மனைவியின் நெற்றி செந்தூரம்
நான் தரிசிக்கும் சூர்யோதயம் அல்லவா?
உன் மனைவி நலம் காக்க
ஒதுங்குகிறேன் நான்.
மனைவியை பரிதவிக்க விட்டு விட்டு
மாற்றாளிடம் மனம் செலுத்துகிறாய்;
ஆண் நண்பனே, ஆத்திரப்படாதே!
என்னிடம் இல்லாத ஆண் பிள்ளைத் தனம்
உன்னிடம் என்ன வாழுகிறது?
ஆளாளுக்கு இங்கு ஆயிரம் வேலைகள்;
ஆகாத ஆசை வேண்டாம், போய்விடு.