மழைக்கும் ஏனிந்த மனப்பான்மை

மழையை நம்பி
மாங்கல்யம் தவிர
மற்றதை அடகு வைத்து
புழுதிக் காட்டில்
வரகு விதைத்த
வரதப்பன் ஏங்கி தவிக்கிறான்
கண்கள் வீங்கி நிற்கிறான்
வருண பகவான் வரவை நோக்கி....
மூலைத்தெரு பிள்ளையாரிடம்
முறையிடுகிறான்....
தன் நிலை உணர்ந்து
கண்ணீர் விடுகிறான்....
அம்மனுக்கு கூழை ஊற்றி
கழுதைக்கு கல்யாணம் செய்து
மழையை அழைக்கிறான்.....
பாவி மழைக்கும்
பாமரனை பிடிக்கலையே....
நகர வீதியில்
நர்த்தனம் ஆடி
கோடிகள் புழங்கும்
அண்ணாச்சி கடைக்குள்
நுரைபுரண்டு நுழைகிறது
சேட்டுகள் கடைக்கும்
சேட்டன் கடைக்கும்
குசலம் விசாரிக்க
குதூகலமாய் குழைகிறது
புழுதிக் காட்டில்
பூமாரி பொழியாமல்
சேற்றை விரும்புபவன்
சோற்றுக்கு வழி செய்யாமல்
சகதி என்று முகம் சுளிக்கும்
சாக்கடை நகரத்தில்
சடுகுடு ஆடும்
மழைக்கு ஏனிந்த
மாற்றாந்தாய் மனப்பான்மை

எழுதியவர் : சித்ரா ராஜ் (9-Jun-15, 9:41 pm)
பார்வை : 88

மேலே