தனிமை என்பது என்ன - உதயா

வயதின் முதிர்ச்சியால்
எனக்கு மூன்றாவது காலும்
பிறந்துவிட்டது
என் வயதோ
வாழ்வின் இறுதி நாட்களை
நெருங்கி கொண்டிருந்தது
எமக்கு தனிமை
மட்டுமே இப்போதெல்லாம்
மீதமிருப்பது
என் மனைவி புண்ணியவதி
நான் ஒருவேளை
இறந்து விட்டால்
சொர்க்கத்தின் வழி தேடி
அலைந்து விடுவனோயென
நினைத்து அவள் வழி தேட
சென்றுவிட்டால்
வியாபாரம் நோக்கத்திற்காகவும்
பிள்ளைகளின் படிப்பிற்காகவும்
எம் மக்கள் பட்டினத்திற்கு
இடம் பெயந்துவிட்டனர்
ஊரிலே பெரிய வீடு
ஊரிலே பெரிய குடும்பம்
இன்றோ அதில் மீதமிருப்பது
நான் மட்டுமே
என் பார்வைகள்
எதையோ நோக்கிய கனத்தில்
என் மனம் சற்று எழுந்து
நினைவு குதிரைகளை
கிளப்பி விட்டது
நான் தனிமையில்
வாழ்கிறேனாயென
யோசிக்கும் போது
என் வீட்டின் உச்சத்தில்
அந்த ஓட்டில் விழுந்த
சிறு ஓட்டையின் வழியே
பகலவனும் இருலவனும்
உறவாக வந்திருந்தனர்
சிலவேளைகளில்
அழையா விருந்தாளியாக
வீட்டினுள் நுழைந்த எலி
மூட்டையில் அடைக்கப் பட்ட
வேர்கடலைகளை தரையில்
தள்ளுகிறதே எனக்காகவா ?
எங்கோ கோவிலில் உடைத்த
தேங்காயை என் தெருவின்
சிங்க குட்டி பைரவன்
கவ்விக் கொண்டு வந்து
என் வீட்டின் திண்ணையில்
மீதம் வைத்துள்ளதே
எனக்காகவா ?
அடிக்கடி வந்து
என்னை பார்த்து விட்டு
செல்லும் அணில்
நான் தோட்டத்தின்
பக்கம் செல்லும் போது
இளநீர் குடுவையில்
வழுக்கையை மட்டும்
மீதம் வைத்துள்ளதே
எனக்காகவா ?
எங்கோ ஓர் மரத்தில்
பழுத்த கொய்யாய் கனியை
கொத்தி வந்த கிளிகள்
என் வீட்டு ஜன்னல் ஓரத்தில்
மீதம் வைத்துள்ளதே
எனக்காகவா ?
இரவு நேரங்களில்
நான் தூங்க செல்லும் போது
என் தூக்கத்தை கெடுக்கவே
சண்டை போடும் எலிகளை
துரத்தி விடுகிறதே பாம்பு
எனக்காகவா ?
நான் தனிமையில்
வாழ்கிறேனா ?
ஆம் அது காண்போரின்
கண்களுக்கு மட்டும்
ஆனால் எனக்கு தான் தெரியும்
எத்துனை உறவுகள்
எத்துனை நண்பர்கள்
எத்துனை நலன் விரும்பிகள்
என்னுடன் வாழ்கிறார்கள் என்று
அப்படியானால் உண்மையிலே
தனிமை என்பது என்ன ?