நட்பின் பிரிவு

ஓயும் ஓர்நாள் கடலின் அலையும்
==ஓயா துனது அன்பின் அலைகள்
நாயும் மறக்கும் நன்றி குணத்தை
==நட்பின் குணமோ மாறா தென்றே
போயும் போயும் உன்னில் வைத்து
== புனிதம் காத்த நட்பின் அருமை
பேயும் மழையில் கரைந்த உப்பாய்
==பிரிந்தே கரைந்து போனது தப்பாய்

சாயும் பாத்திரம் சாயும் நீராய்
==சாய்ந்து கொள்ளும் சந்தர்ப் பவாத
நோயும் பிடித்த நுணலாய் வாழ்வில்
==நூறு நட்பு வரலாம் ஆனால்
தீயும் ஓர்நாள் எரிக்கும் தேகம்
==தீய்ந்த போதும் தீயா நட்பே
நீயும் என்னை எரித்த வார்த்தை
==நெருப்பின் நெஞ்சும் நினைத்தே கலங்கும்

தாயும் மகளும் ஆன போதும்
==தனித்தனி யாகவே உனக்கும் எனக்கும்
வாயும் வயிறும் உள்ள தென்றே
==வாழும் போதே உணர்த்தித் தூரம்
தேயும் நிலவாய் திசைகள் மாறி
==தீயாய் எரிக்கும் தோழமை விறகே
நீயும் நானும் யாரோ இன்று
==நினைவில் வாழக் கற்றது நன்று.

- மெய்யன் நடராஜ்,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Jun-15, 2:16 am)
Tanglish : natpin pirivu
பார்வை : 1305

மேலே