ஓய்ந்தது கல்லறை

கூட்டித்தள்ளப்பட்ட கோழியிறகின்
உரிந்த கருமுடிகளில் ஒன்று
சரியாக வந்துவிட்டதாய்
அறையெங்கும் அமானுஷ்ய மூச்சிரைக்கின்றது ...

எனது
இயலாமைகளெல்லாம்
சோளக்கருதின் பற்களாய்
உதிர - அவை
கடினமாகவே மெல்லப்படுகின்றது
அணையாத மின்விளக்கில்.....

வெகு தொலைவுகளில்
இருப்பதாய்
நினைவுகள் மெல்லமாய்
எட்டிப்பார்க்கத் துவங்குவதில்
பனிரெண்டு மணியாய்ச் சுடுகின்றது
அலைபேசி ....

ஒற்றைச் சாளரமும்
பதுக்கிவைக்கப்பட்டிருப்பதில்
அகண்ட தைரியமொன்று
கிணறாகவே தெரிகின்றது.....

எந்தப் பல்லியும்
உச்சுக்கொட்டி சோதிக்கவில்லை
உறங்கிவிட்டேனாவென்று....

அக்கருமுடி
தடவிப் போகும் தரையினில்
காற்றுக்கு மட்டும்
காதல் புரிந்திருக்கின்றது.....

இதமாகிய நொடியில்
திரும்பிப் பார்க்கின்றேன்
வெள்ளை உறையில் மஞ்சள்ப் படிவம்
ரகசியமாய்ச்
சிரித்துக்கொண்டேன்
கவிதைப்போட்டிக்கு நாட்களுண்டு....!

எழுதியவர் : புலமி (17-Jun-15, 1:16 am)
பார்வை : 125

மேலே