கடவுள் தந்த வரம் ----------------------------------- ஊ வ கணேசன்

இனாமாக கிடைத்த
கவிதை புத்தகத்தையும்
பழைய பேப்பர் கடையில் போட்டு
பஞ்சு மிட்டாய் வாங்கித் தின்ற எனக்கும்
கவிதை எழுத வரம் தர வேண்டி
கடவுளை அணுகினேன்....

என் எண்ணங்களை
எழுத்து வடிவில் மடலாக எழுதி
இறைவன் இருக்கும் கோவில் மரத்தில்
கட்டித் தொங்க விட்டேன்
கடவுள் கண்களில் படுமென்று நம்பி....

கூட்ட நெரிசலில் சிக்கிய காரணத்தால்
கசங்கிப் போனது கடித வடிவிலான
என் எண்ணங்கள் எல்லாமே....

நேர்த்திக் கடனாய் பல
மொட்டைகள் இட்டேன்
சட்டை செய்யவில்லை அந்த
கம்பீரக் கடவுள்....

தேங்காய் விடலை சத்தத்தில்
தேவனுக்கு கானமிசைத்தேன்
மாங்காய் மடையனென்று
மெளனம் சாதித்தார்.....

அர்ச்சனை செய்து
ஆரத்தி எடுத்தேன்
தட்சணை குறைவென்று
தகராறு செய்தார்.....

விழாக்கள் எடுத்து
விமர்சனம் செய்தேன்
பழக்கம் இல்லையென்று
பாசாங்கு செய்தார்....

இத்தனை மனு செய்தும்
வரம் தராத கடவுள் மீதே
வழக்குத் தொடர்ந்தேன்
நான்......

எழுத தொடங்கிய
இருபது வயதில்
நான் தொடர்ந்த
அந்த வழக்கு
எழுத வலுவிழந்த
அறுபது வயதில்
தீர்ப்புக்கு வந்தது....

அப்போதும் கூட
என் வழக்கு
தள்ளுபடி ஆனது....

ஏற்கெனவே இது போல்
எண்ணற்ற வழக்குகள்
நிலுவையில் உள்ளதென.....

மனதை தளர விடாமல்
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட
சண்டைக்காரன் காலில் விழுவது
மேல் என்று எண்ணி
கடவுளிடமே சென்றேன்......

சாதிக்க நினைக்கும் என்னை
சோதிக்காமல் வரம் கொடு என்று
மண்டியிட்டேன்
தரவில்லையெனில்
மாண்டு விடுவதாக எச்சரித்து.....

என் வேண்டுகோளுக்கு
செவி சாய்த்த கடவுள்
என் முன்னே தோன்றினார்.....

பார்வை குன்றிய என் தள்ளாத வயதிலும்
பளிச்சென தென்பட்டார் கடவுள்....

தங்கம் விலை கிராமுக்கு மூவாயிரத்தை
தொட்ட பொழுதிலும் கூட
தங்க விக்ரகமாய் காட்சி தந்தார்.....

கை கூப்பி வணங்கினேன்....

கடவுள் என்னிடம் பேசினார்.....

பக்தா..... கணேசா.....

மு.வ. என்றால் தமிழகத்தில்
தெரியாதோர் இல்லை....

அது போல்
ஊ . வ. என்றாலும் தெரியும் படி
வரம் தருகிறேன் என்று கூறி
என்னிடம் ஒரு புத்தகத்தை
கொடுத்து விட்டு மறைந்தார்....

ஆவலாய் நான்
அந்த புத்தகத்தை
வாங்கிப் படித்தேன்....

அதில் எழுதியிருந்தது
ஒரேயொரு திருக்குறள் மட்டுமே....

வள்ளுவர் எழுதிய
குறள் அல்ல அது....

வரமாய் வந்த வான் கடவுள்
எனக்கு மட்டுமல்லாது
நமக்காக தரித்த குறள்....

அது என்னவென்றால்.............

கழுத்து புகழ்மாலை வேண்டுவோர் செல்க
எழுத்து இணைய தளம்....


ஊ . வ. கணேசன்.

எழுதியவர் : ganesan uthumalai (19-Jun-15, 11:46 pm)
பார்வை : 113

மேலே