4 யோகா
யோகா!
************
இந்தியா உலகிற் களித்தகொடை!
இதைநீ பழக என்னதடை?
முந்தையோர் தினசரி வாழ்க்கைநடை!
முழுஆ ரோக்கியம் தழைக்கவிடை!
முப்பது வயதில் முதுகுவலி!
நாற்பது வயதில் நடக்கவலி!
ஐம்பதில் உடலை அசைக்கவலி!
ஐயோ அடுத்தது மரணவலி!
வலிகள் வராமல் தடுக்கும்வழி!
வாலிபம் நீடிக்கச் செய்யும்வழி!
மெலிவுறும் நோயைப் போக்கும்வழி!
மெய்யை மெய்யாய்க் காக்கும்வழி!
உள்ளுறுப் பனைத்தும் பலப்படுத்தும்!
உடல்சுறு சுறுப்பாய் இயங்கவைக்கும்!
தெள்ளிய சிந்தனை வரவழைக்கும்!
தேடும் வாழ்க்கைக்கு விடைகிடைக்கும்!
குடிப்,புகைப் பழக்கம் வரவிடாது!
குதர்க்கம் கோழைத் தனம்இராது!
நடப்பதில் நல்லதே பார்த்திருக்கும்!
நாளும் நிம்மதி சேர்த்திருக்கும்!
விழிப்புணர் வோடு இருக்கவைக்கும்!
விரயம் ஆவதைத் தடுத்துநிற்கும்!
களிப்புணர் வோடு பழகவைக்கும்!
காரிய வெற்றிக்கு வழிவகுக்கும்!
ஐந்தில் வளைத்தால் வளைந்துவிடும்!
ஆயுள் வரைக்கும் தொடர்ந்துவரும்!
பிந்திய வயதினர் விலக்கிடுவீர்!
பேரன் பேத்தியைப் பழக்கிடுவீர்!
விவேகா நந்தர் பரப்பியது!
மேலை நாட்டைத் திருப்பியது!
விவேகம் உள்ளவர் கடைப்பிடிப்பீர்!
வெட்டிப் பொழுதிற்கு விடைகொடுப்பீர்!
நாட்டுத் தலைவர்கள் செய்வதிது!
நடிகர்கள், வீரர்கள் செய்வதிது!
வீட்டிற்குள் நாமும் செய்திடுவோம்!
விளையும் மேன்மைகள் உணர்ந்திடுவோம்!
மதத்தின் சாயம் பூசாதீர்!
மண்டை கனத்துப் பேசாதீர்!
ஒதுக்கித் தள்ளி வீசாதீர்!
ஒத்துக் கொள்ளக் கூசாதீர்!
*************************************************************
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
