மனதார ஒரு மனு

கேட்க ஆளின்றி இறைவனிடமே கேட்கும் இதயக் குரல்
வெண்பாக்கள்


அல்லாஹ்  உனையன்றி ஆருள்ளார் போய்நிற்க
எல்லாம் அறிந்த இறைவன்நீ -பொல்லாத்
துயரினை நீக்கித் துவளும் மனத்தை
உயர்ந்திட வைப்பாய் உவந்து


அறிவினைத் தந்தென்னை அல்லல்பட வைத்தால்
நெறியும் பிறழ்ந்துநான்  நித்தம் - முறியும்
மனத்தால் முழுதும் மருந்தில்லா நோயால்
தினத்தைக் கடத்தவோ சொல்


என்ன தவறிழைத்தேன் என்னிறையே உன்வழியில்
சொன்ன படிநான் சுழலாமல் - மன்னிக்கக்
கூடாத தப்புகள் செய்தேனா கூறிவிடு
வாடாதோ எந்தன் மனது


வார்த்தை வளம்தந்தாய் வாழ்க்கை எனும்கவிதை
கோர்க்கையில் கோபந்தான் கொண்டாயோ- தீர்க்கமாய்
உன்னையே நம்பியிங்கு ஓடோடி வந்தவனை
முன்னின்று காத்தல் கடன்


வறுத்தும் கடன்சுமைகள் வாட்டிடுதே வாழ்வை
நிறுத்தியதை நீகாக்கா விட்டால்- பொறுத்த
நிலைமாறி நித்தம் தடுமாறிச் சாக
அலைய விடுவதோஉன் அன்பு

அ.மு.நௌபள் கவிதைகள். 23/06/2015

எழுதியவர் : அபி மலேசியா (22-Jun-15, 10:39 pm)
பார்வை : 95

மேலே